Published : 24 Jul 2020 01:16 PM
Last Updated : 24 Jul 2020 01:16 PM
கர்நாடகாவில் பள்ளியின் பொன் விழாவையொட்டி முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து 50 ஏக்கர் தரிசு நிலத்தில் நெல் பயிரிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் நிட்டூர் உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அரசு உதவிபெறும் இப்பள்ளி தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து பொன் விழா கொண்டாட முடிவெடுக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் முரளி கடேகர் தலைமையில் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது தலைமை ஆசிரியர் முரளி கடேகர், இந்த ஆண்டு பள்ளியின் பொன் விழாவை வெகு விமரிசையாகவும், ஆக்கப்பூர்மாகவும் கொண்டாட வேண்டும். 35 வருடங்களுக்கு முன்பு நான் முதன் முதலில் இந்த பள்ளிக்கு வேலைக்கு வந்த போது, சுற்றியுள்ள நிலங்கள் யாவும் நெல் பயிரிடப்பட்டு பசுமையாக காட்சி அளித்தது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிலத்தில் யாரும் விவசாயம் செய்யாமல் தரிசாக மாறிவிட்டது.
பள்ளியை சுற்றி பசுமையாக இருந்த நிலம் வறண்டு, தரிசாக காட்சி அளிப்பது வருத்தமாக இருக்கிறது. இந்தp பள்ளி தொடங்கப்பட்டபோது எப்படி சுற்றியிருந்த வயல்கள்யாவும் பசுமையாக இருந்ததோ, பொன் விழா ஆண்டிலும் அப்படி மாற்ற வேண்டும். நிட்டூர் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை பயிரிட நான் அனுமதி பெற்றிருக்கிறேன்.
பள்ளியைச் சுற்றியுள்ள பல வயல்கள் நம் முன்னாள் மாணவர்களுக்கு சொந்தமானது. அவர்களும் நிலத்தில் பயிரிட அனுமதி அளித்தால் முன்னாள் மாணவர்கள், இந்நாள் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊர் மக்கள்ஆகியோருடன் இணைந்து நெல் பயிரிடலாம். அதில் விளையும் நெல்லை கோயிலுக்கும், ஏழைகளின் பயன்பாட்டுக்கும் வழங்கலாம் எனத் தெரிவித்தார்.
இதற்கு முன்னாள் மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து ‘தரிசு நிலத்தை மீண்டும் விளைய வைப்போம்’ என்ற அமைப்பை தொடங்கி, வேளாண்மை செய்வதற்கான வேலைகளில் இறங்கினர். இதை அறிந்த உடுப்பி சட்டப்பேரவை எம்எல்ஏ ரகு பட் தாமாக முன்வந்து, நிட்டூர் பள்ளியின் முயற்சியில் கைகோர்த்தார்.
கடந்த மே மாதம் முதற்கட்டமாக 50 ஏக்கர் நிலம் பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து நிட்டூரைச் சேர்ந்த 5 கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர், முன்னால் மாணவர்கள் ஆகியோரை கொண்டு 5 குழுக்கள் உருவாக்கப்பட்டன. அவர்களுக்கு தரிசு நிலத்தை திருத்துவது, சமன் செய்வது, நீர் பாய்ச்சி நாற்று விதைப்பது, பயிரிடுவது, களை பறிப்பது உள்ளிட்ட பணிகள் பிரித்து கொடுக்கப்பட்டன.
இந்தப் பணிகள் முறையாக நடந்த நிலையில் கடந்த 15ம் தேதி பயிர் நடவு தொடங்கியது. உடுப்பி எம்எல்ஏ ரகுபட், தலைமை ஆசிரியர் முரளி கடேகர், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் சேற்றில் இறங்கி பயிர் நட்டனர். இதனால் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தரிசாக கிடந்த நிலம் நெல் வயல்களாக மாறியது. வறண்டு காணப்பட்ட நிலப்பரப்பு இப்போது பசுமையாக காணப்படுகிறது.
இதனால் மகிழ்ச்சி அடைந்த கிராம மக்கள் மேலும் 25 ஏக்கர் நிலத்தை வேளாண்மை செய்யுமாறு நிட்டூர் பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர். அடுத்த வாரத்தில் அங்கும் பயிர் நடவு தொடங்கப்படும் என தலைமை ஆசிரியர் முரளி கடேகர் தெரிவித்துள்ளார்.
50 தரிசு நிலத்தில் பயிரிட்டு பள்ளியின் பொன் விழாவை கொண்டாடியது அந்த பகுதியில் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT