Published : 24 Jul 2020 09:56 AM
Last Updated : 24 Jul 2020 09:56 AM
தென் மாநிலங்களில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் கரோனா தொற்று பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழகம், உள்பட 6 தென் மாநிலங்களில் கரோனாவால் புதிதாக 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக ஆந்திர மாநிலத்தில் மட்டும் நேற்று ஒரேநாளில் ஏறக்குறைய 8 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். அடுத்ததாக தமிழகத்தில் 6 ஆயிரத்துக்கு அதிகமானோரும், கர்நாடகத்தில் 5 ஆயிரத்துக்கு அதிகமானோரும் பாதிக்கப்பட்டனர்.
கேரள மாநிலத்தில் தொடர்ந்து 2-வது நாளாக ஆயிரத்துக்கு மேற்பட்டோரும், தெலங்கானாவில் 1500க்கு மேற்பட்டோரும் புதிதாக நோய்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் நேற்று 123 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டதையடுத்து, 2,421 பேராக பாதிப்பு அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்களிலும் சேர்த்து நேற்று ஒரே நாளில் 22 ஆயிரத்து 303 பேர் புதிதாக கரோனா நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
நாட்டில் நாள்தோறும் உருவாகும் கொரோனா தொற்றுகளில் பாதிக்குமேற்பட்டவை தென் மாநிலங்களில் இருந்து உருவாகிவருகிறது குறிப்பிடத்தக்கது.
8ஆயிரம்பேர் பாதிப்பு
ஆந்திர மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் மட்டும் 7,998 பேர் புதிதாக நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 72,711 ஆக அதிகரித்துள்ளது, நேற்று 61 பேர் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 884 ஆக அதிகரித்துள்ளது.
இதில் ஆந்திர மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டம்தான் ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளது. கடந்த சில நாட்களாக இங்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களில் மட்டும் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
2 லட்சத்தை நெருங்கும் தமிழகம்
தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 6 ஆயிரத்து 472 பேர் புதிதாக நோய் தொற்றுக்கு ஆளாகினர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. மேலும் 88 பேர் உயிரிழந்ததையடுத்து, ஒட்டுமொத்த உயிரிழப்பு 3,232 ஆக அதிகரித்துள்ளது.
மோசமாகும் பெங்களூரு
கர்நாடக மாநிலத்திலும் நேற்று ஒரேநாளில் 5 ஆயிரத்து 30 பேர் பாதிக்கப்பட்டனர், 97 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 80 ஆயிரத்து 863 ஆக அதிகரித்துள்ளது. லாக்டவுன் முடிந்தபின் மீண்டும் மக்கள் பெங்களூரு நகரில் இயல்பு நிலைக்கு வந்துள்ள நிலையில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்நகரில் நேற்று மட்டும் 2,207 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 97 உயிரிழந்ததில் பெங்களுருவில் மட்டும் 48பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் கலாபுர்க்கி மாவட்டத்தில் அதிகபட்சமாக 3,370 பேரும், தட்சின கன்னடாவில் 4,209 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2-வது நாளாக ஆயிரம்
கேரளாவில் தொடர்ந்து 2-வது நாளாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், அங்கு நேற்று புதிதாக ஆயிரத்து 78 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதன்மூலம் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 16 ஆயிரத்தைக் கடந்துள்ளது, பலி எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்து வருவதால், மீண்டும் மாநிலம் முழுவதும் ஊரடங்கு கொண்டுவருவது குறித்து முதல்வர் பினராயி விஜயன் ஆலோசித்து வருகிறார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சமூகப் பரவல் எச்சரிக்கை
தெலங்கானா மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 1,567 பேருக்கு புதிதாக தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்து 50,826 ஆக அதிகரித்துள்ளது. அந்த மாநிலத்தில் நேற்று 9 பேர் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 447 ஆக அதிகரி்த்துள்ளது.
கிரேட்டர் ஹைதராபாத்தில் கரோனா தொற்று கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிட்டதால், அங்கு சமூகப்பரவல் தொடங்கிவிட்டதாக நேற்று தெலங்கானா அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீவாச ராவ் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT