Last Updated : 24 Jul, 2020 08:35 AM

13  

Published : 24 Jul 2020 08:35 AM
Last Updated : 24 Jul 2020 08:35 AM

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்புநிதியாண்டில் ‘மைனஸ் 6 முதல் 9சதவீதம் ’ வரை வீழ்ச்சி அடைய வாய்ப்பு: பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கணிப்பு

பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி : கோப்புப்படம்

ஹைதராபாத்

கரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் மைனஸ் 6 முதல் 9 வரை வீழ்ச்சி அடையும் என எதிர்பார்க்கிறேன். ஆனால், சரியான கொள்கைகளை வகுத்து திட்டமிட்டு செயல்பட்டால், அடுத்த நிதியாண்டில் 7 சதவீதம் வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளது என்று பாஜக மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரேதச கிளைகள் மற்றும் இந்திய அமெரிக்க வர்த்தக சபை சார்பில் காணொலி மூலம் ஒரு நிகழ்ச்சிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பாஜக மூத்தத் தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி பங்கேற்று பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரியும். நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 6 முதல் 9 வரை வீழ்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கிறேன். பொருளதாாரம் கடந்த 5 ஆண்டுகளாகவே சீர்குலைந்து விட்டது. இதைச் சுட்டிக்காட்டி பலமுறை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிவிட்டேன்.

பொருளாதாரத்தை எவ்வாறு வளர்ச்சிப்பாதைக்கு திருப்புவது?. என்று ஒருவர் கேட்டபோது, அவர் பதில் அளிக்கையில் " நம்மிடம் உற்பத்தி செய்வதற்கான அனைத்து வளங்களும், திறனும் இருக்கிறது. இதில் கேள்வி என்னவென்றால், லாபமுள்ள வகையில் உற்பத்தி செய்ய முடியுமா, விற்க முடியுமா என்பதுதான். தொழிற்சாலைகளுக்கு தேவையான அளவு தொழிலாளர்கள் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

தொழிலாளர்கள் அனைவரும் மீண்டும் பணிக்குத் திரும்பிவிடுவார்கள். இவை அனைத்தும் நடந்துவிட்டால் 2021-22ம் ஆண்டில் அதாவது அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 7 சதவீதம் வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளது.

ஆனால், இவை நடக்க சரியான பொருளாதாரக் கொள்கைகளை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாகப் பின்பற்றிய கொள்கைகளை பின்பற்றக்கூடாது.

பொருளாதார வளர்ச்சி குறைந்து வருகிறது, சீர்குலைவை நோக்கிச் செல்கிறது என எச்சரித்து பிரதமர் மோடிக்கு பல தருணங்களில் நான் கடிதம் எழுதியிருக்கிறேன். கடந்த 4 நாட்களுக்கு முன்புகூட இந்த நிதியாண்டு இறுதியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு இருக்கும் என்பதை விவரித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினேன்.

கடந்த 2015-ம் ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரியத் தொடங்கியபோதே நான் பிரதமர் மோடிக்கு எச்சரித்து கடிதம் எழுதினேன். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் பொருளாதாரம் சரிந்து வருகிறது.

கரோனா வைரஸால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து சிறு,குறுந்தொழில்கள், தொழிற்சாலை, நிறுவனங்களை மீட்க மத்திய அரசு அறிவித்த ரூ.20 லட்சம் கோடி நேரடியாக தேவையை உருவாக்கிக் கொடுக்காது. இந்த நேரத்தில் நேரடியாகத் தேவையை உருவாக்க ரூ.1.50 லட்சம் கோடி போதும்.
இந்தியாவிடம் அபரிமிதமான மனிதவளம் இருக்கிறது. ஜப்பான் நாடுபோல் முறைப்படி பயன்படுத்தினால், நாம் சிறந்த வளர்ச்சியை அடைய முடியும்

இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

அப்போது, சீனாவுடன் இந்தியா போர் செய்ய முயன்றால், வெல்ல முடியுமா என்று ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு சுப்பிரமணியன் சுவாமி பதில் அளிக்கையில் “ சீனாவுக்கு எதிராக ஒரு மாதம் இந்தியா தொடர்ந்து போர் செய்தால், நிச்சயம் வெல்ல முடியும். ஆனால், ஒருமாதம் தொடர்ச்சியாக போரிடுவதற்கு இந்தியாவுக்கு திறன் இருந்தால் நாம் சீனாவை வெல்லலாம். நம்முடைய வீரர்கள் வீரத்துடன் சீனாவை எதிர்த்து தற்போது எல்லையில் போராடியுள்ளார்கள், ஆனால், துரதிர்ஷ்டமாக 20 பேரை இழந்துவிட்டோம்.

மற்றொரு கேள்விக்கு சுப்பிரமணியன் சுவாமி அளித்த பதிலில், “ மத்திய அரசு வால்மார்ட் போன்ற அமெரிக்க நிறுவனங்களை வளர்ததுவிடுவதும், ஆதரவளிப்பதால் நம்நாட்டின் லட்சக்கணக்கான சில்லரை வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். அமெரிக்காவுடன் ஏற்பட்டுள்ள இந்தியாவுக்கான வர்த்தக உறவில் அழுத்தம் கொடுத்து இந்தியாவிலிருந்து வேளாண் பொருட்களை அந்நாட்டில் இறக்குமதி செய்ய வைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x