Published : 23 Jul 2020 06:01 PM
Last Updated : 23 Jul 2020 06:01 PM
கரோனா வைரஸ் பரவல், மழைவெள்ளம் காரணமாக தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம் உள்ளிட்ட 7 சட்டப்பேரவை மற்றும் ஒரு மக்களவைத் தொகுதிக்கு செப்டம்பர் 7-ம் தேதிவரை இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
தமிழகத்தில் குடியாத்தம், திருவொற்றியூர், அசாமில் சிப்சாஹர், மத்தியப் பிரதேசத்தில் அகர் தொகுதி, உத்தரப்பிரதேசத்தில் புலந்தசாஹர்,துண்ட்லா தொகுதிகள், கேரளாவில் சாவரா ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகள், பிஹார் மாநிலத்தில் உள்ள வால்மீகி நகர் மக்களவைத் தொகுதி ஆகியவற்றின் எம்.பி. எம்எல்ஏக்கள் மறைந்ததையடுத்து, அவை காலியானதாக அறிவிக்கப்பட்டன.
இந்த 8 தொகுதிகளுக்கும் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 3 மாத காலக்கெடுவுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், நாட்டில் தற்போதுகரோனா வைரஸ் பரவல் மற்றும் வடமாநிலங்களில் பெய்துவரும் பருவமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் ஆகியவற்றால் இடைத்தேரதல் நடத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சட்டத்துறை அமைச்சகத்திடம் தேர்தல் நடத்த இயலாத சூழல் இருப்பதைக் கூறி தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்து தேர்தலைத் ஒத்திவைக்கும் முடிவையும் தெரிவித்தது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன்படி குறிப்பிட்ட அசாதாரண சூழலில் 6 மாத காலத்துக்குள் தேர்தல் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால், தேர்தல் ஆணையம் மத்திய அரசுடன் ஆலோசித்து முடிவு எடுக்க முடியும். அதன்படி இந்த 8 தொகுதிகளுக்கும் தேர்தலை ஒத்தி வைத்து தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் “ கரோனா வைரஸ் பரவல், மழை வெள்ளம் ஆகிய சூழல்தான் இடைத்தேர்தலை ஒத்தி வைக்கக் காரணமாகும். தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பல இடங்களில் கரோனா பாதிப்பும் குறையவில்லை, மழை வெள்ளமும் குறையவில்லை. வாக்காளர்கள், மக்களின் நலன்கருதிதான் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஒருதொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால் 180 நாட்களுக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். ஆனால், அசாதாரண சூழல் நிலவுவதால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் நாளை(வெள்ளிக்கிழமை) கூடி இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது தொடர்பாக ஆலோசிக்க இருக்கிறது” எனத் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT