Published : 23 Jul 2020 05:12 PM
Last Updated : 23 Jul 2020 05:12 PM
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மக்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே சென்றால் ரூ. ஒரு லட்சம் அபராதமும், ஊரடங்கு விதமுறைகளை மீறி வெளியே சுற்றினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் அவசரச் சட்டத்துக்கு மாநில அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
ஜார்க்கண்ட் தொற்றுநோய் அவசரச் சட்டம் 2020 என்ற பெயரில் இந்த அவசரச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி ஜார்க்கண்டில் 6,456 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 64 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மாநில அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்துவருகிறது.
மாநிலத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளிலும் படுக்கைகள் இல்லாத சூழல் நிலவி வருகிறது. இதனால் கரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சையளிக்க மறுக்கக்கூடாது என்று ஜார்க்கண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மக்களைத் தனிமைப்படுத்தும் முகாமுக்காக திருமண மண்டபங்கள், பெரியஅரங்குகளையும் வழங்கஅரசு சார்பில் கோரப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் இந்த வாரத்தின் கடைசி 3 நாட்களில் முழு ஊரடங்கு செயல்படுத்த மாநில அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இதில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அரசின் நடவடிக்கைளைத் தவிர்த்து, மக்களின் ஒத்துழைப்பு, விதிமுறைகளைக் கடைபிடித்தல் முக்கியம் என்று ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறத்தப்பட்டது.
இதையடுத்து, முகக்கவசம் இன்றி மக்கள் வெளியே சென்றால் ரூ.ஒரு லட்சம் அபராதமும், ஊரடங்கு நேரத்தில் விதிமுறைகளை மீறி வெளியே சென்றால் அவர்களைக் கைது செய்யவும், அவர்களுக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கவும் அவசரச்சட்டம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது.
தொற்றுநோய் அவசரச் சட்டம் 2020 என்ற பெயரில் இந்த அவசரச்சட்டம் கொண்டு வரப்பட்டு அதற்கு அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT