Published : 23 Jul 2020 09:40 AM
Last Updated : 23 Jul 2020 09:40 AM
தமிழகம், கர்நாடகா, தெலங்கானா, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய 6 தென் மாநிலங்களிலும் சேர்த்து ஒட்டுமொத்தமாக நேற்று ஒரே நாளில் 19 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் அதிகபட்சமாக ஆந்திர மாநிலத்தில் நேற்று மட்டும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு புதிதாக நோய்தொற்று ஏற்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக 6 மாநிலங்களிலும் சேர்த்து 19 ஆயிரத்து 374 பேர் நேற்று புதிதாக நோய்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
கரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்தியாவின் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணி்க்கை இன்று 12 லட்சத்தைக் கடந்துள்ளது, உயரிழப்பும் 28 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
கர்நாடகாவில் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நோய்தொற்றால் அங்கு ஊரடங்கு போடப்பட்டது. ஆனால், கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு தீர்வல்ல என்று கூறிய முதல்வர் எடியூரப்பா முழுமையாக ஊரடங்கை ரத்து செய்து அறிவித்துள்ளார்.
கேரள மாநிலத்திலும் படிப்படியாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. முதல்முறையாக கேரளாவில் நேற்று ஆயிரம்பேருக்கு மேல் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மீண்டும் மாநிலம் முழுவதும் ஊரடங்கு கொண்டு வருவது குறித்து முதல்வர் பினராயிவிஜயன் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தைத் பொறுத்தவரை சென்னையில் படிப்படியாக பாதிப்பு குறைந்தபோதிலும்,பிற மாவட்டங்களில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
ஆந்திர மாநிலம்
அதிகபட்சமாக ஆந்திர மாநிலத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து45 பேர் பாதிக்கப்பட்டனர்.
6,494 பேர் குணமடைந்தனர், 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஒட்டுமொத்த பாதிப்பு 64,713 ஆகவும், உயிரிழப்பு 823 ஆகவும் அதிகரித்துள்ளது. 31,763 பேர் கரோனாவுக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர், 32,127 பேர் குணமடைந்துள்ளனர்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த எம்எல்ஏவுக்கு ேநற்று கரோனா உறுதியானது. இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்படும் 7-வது ஆந்திர எம்எல்ஏ ஆவார்.
தமிழகம்
அதைத் தொடர்ந்து தமிழகத்தில் 5 ஆயிரத்து 849 பேர் புதிதாக நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் நாள்தோறும் 4 ஆயிரத்துக்கும் மேல் நோய் தொற்று அதிகரித்து வருகிறது. ஒட்டுமொத்த பாதிப்பு 1,86,492 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,31,583 ஆகவும், சிகிச்சையில் 51,765 பேர் உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்து 144 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடகா
மூன்றாவதாக கர்நாடக மாநிலத்தில் 4 ஆயிரத்து 764 பேர் புதிதாக கரோனாவால் பாதிக்பட்டனர். இதில் பெங்களூருவில் மட்டும் 2,050 பேர் பாதிக்கப்பட்டனர். கர்நாடக மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 75,833பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,519 பேர் உயிரிழந்துள்ளனர். 27,239 பேர் குணமடைந்துள்ளனர்.
முதல்முறையாக ஆயிரம்
கேரள மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் 30-ம் தேதி முதல் கரோனா நோயாளியாக சீனாவிலிருந்து வந்த கேரள மாணவி பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் கரோனாவில் பலர் நாள்தோறும் பாதிக்கப்பட்டாலும், ஒருமுறைகூட பாதிப்பு ஆயிரத்தைத் தொட்டதில்லை.
ஆனால், நேற்று முதல்முறையாக ஒரேநாளில் 1,038 பேர் புதிதாக கரோனா தொற்றுக்கு ஆளாகினர். இதில் 758 பேருக்கு யார்மூலம் நோய் தொற்று ஏற்பட்டது என்பது கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் 57 பேருக்கு எவ்வாறு கரோனா வந்தது தெரியவில்லை. 87 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 109 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்துள்ளனர். கேரளாவில் கரோனாவுக்கு உயிரிழப்பு 45 ஆக அதிகரித்துள்ளது.
தெலங்கானா
தெலங்கானா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 1,554 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் அங்கு ஒட்டுமொத்த பாதிப்பு 49,259 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு 438 ஆக அதிகரித்துள்ளது. இந்த 1554 தொற்றுகளில் 858 பேர் மட்டும் கிரேட்டர் ஹைதராபாத்தில் மட்டும் ஏற்பட்டுள்ளது.ரெங்காரெட்டி மாவட்டத்தில் 132 , மேட்சல் மாவட்டத்தில் 36 பேரும் பாதிக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT