Published : 22 Jul 2020 11:51 AM
Last Updated : 22 Jul 2020 11:51 AM
கரோனா நோய்த்தொற்றுக்கு ஊரடங்கு தீர்வாகாது. முகக்கவசம் அணிவதும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதுமே தீர்வாகும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவி வருகிறது. கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பெங்களூருவில் மட்டும் 27 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கரோனாவைக் கட்டுப்படுத்த கடந்த 14-ம் தேதி முதல் 22-ம் தேதி (இன்று) காலை 5 மணிவரை பெங்களூருவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதே போல, மைசூரு, கல்புர்கி உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும் கடந்த ஒரு வாரம் ஊரடங்கு அமலில் இருந்தது. இருப்பினும், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் 4,000-ஐக் கடக்கிறது. இதனால் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய எதிர்க்கட்சிகள் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தன.
இந்நிலையில், முதல்வர் எடியூரப்பா நேற்று (ஜூலை 22) மாலை தொலைக்காட்சி நேரலை வாயிலாக பொதுமக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:
"கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த கடந்த ஒரு வார காலமாக அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கினால் நல்ல பலன் கிடைத்தது. பெங்களூரு மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களிலும் தொற்றுப் பரவல் வேகம் ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது. அதனால் இனி ஊரடங்கு தேவையில்லை. பெங்களூருவில் நோய் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள 6,160 பகுதிகளில் ஊரடங்கு அமலில் இருக்கும். பிற மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் இந்த முடிவைப் பின்பற்றலாம்.
ஊரடங்கு உத்தரவு நிச்சயம் கரோனாவுக்குத் தீர்வு ஆகாது. அனைவரும் முகக்கவசம் அணிவதும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதுமே தீர்வு ஆகும். மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தாலே கரோனா வைரஸ் பரவுவதைத் தடுத்துவிடலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் நடத்திய ஆய்வில் ஒவ்வொரு கரோனா நோயாளிக்கும் சராசரியாக 47 பேருடன் தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது.
அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தால் மற்றவர்களுக்குத் தொற்று பரவியிருக்காது. நோயாளிகளுக்குத் தேவையான சிகிச்சை வசதிகளும், மருத்துவமனை படுக்கைகளும் உள்ளன. பெங்களூருவில் தனியார் மருத்துவமனைகளில் 11 ஆயிரத்து 230 படுக்கைகள் புதியதாக ஒதுக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இருந்து வந்தவர்களால் இங்கேயும் கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்தது.
கரோனா நோயின் காரணமாகப் பிறப்பிக்கப்படும் ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. கரோனா வைரஸ் ஒழிப்பு மற்றும் பொருளாதாரச் சமநிலை இரண்டையும் ஒன்றாகத்தான் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியுடன் தங்களது பணிகளை மேற்கொண்டால் இரண்டையும் சரியாகக் கையாள முடியும்".
இவ்வாறு எடியூரப்பா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT