Published : 22 Jul 2020 07:59 AM
Last Updated : 22 Jul 2020 07:59 AM

மக்கள் தொகை அதிகரிப்பால் புதிய நாடாளுமன்ற கட்டிடம் அவசியம் 3 மடங்கு அதிக உறுப்பினர்கள் அமர முடியும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல்

டெல்லியில் அமையவுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கான வரைபடம்.

புதுடெல்லி

டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ், மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நாடாளுமன்ற புதிய கட்டிடம் கட்ட மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மத்திய அரசின் பொதுப்பணித் துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

தற்போது நாடாளுமன்ற நடவடிக்கைகள், பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, வரும் பார்வையாளர்கள் அதிகரிப்பு போன்ற காரணங்களைக் கருத்தில் கொண்டு பெரிய கட்டிடம் அமைய வேண்டியது அவசியமாகிறது. தற்போதுள்ள கட்டிடத்தில் அந்த வசதி இல்லாததால் புதிய கட்டிடத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும். புதிய சென்டிரல் விஸ்டா திட்டத்தில் 17 கட்டிடங்கள் அமையும். மேலும்39 அமைச்சங்களின் அலுவலகங்களும் செயல்படும். பல்வேறு இடங்களில் செயல்படும் மத்திய அரசு அலுவலகங்கள் இந்த புதிய கட்டிடங்களுக்கு மாற்றப்படும்.

தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களைக் காட்டிலும் 3 மடங்கு அதிகமான உறுப்பினர்கள் அமரும்படி புதிய கட்டிடத்தில் இடவசதி செய்யப்படும். அதைப் போலவே தற்போதுள்ளமாநிலங்களவை உறுப்பினர்களைக் காட்டிலும் 4 மடங்கு உறுப்பினர்கள் அமர இடவசதி செய்யப்படும். இந்த திட்டம் சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் அமையும்.

1971-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்குப்படி தற்போது மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 545-ஆக உள்ளது. இது2026-க்குப் பிறகு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே அதற்கேற்ப கட்டிடத்தில் இருக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதன்படி தற்போது அமைக்கப்படும் புதிய கட்டிடத்தில் கூட்டுக் கூட்டத்தின்போது 400 உறுப்பினர்கள் கூடுதலாக அமரும் வகையில் வசதிகள் செய்யப்படும்.

உலகில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடங்களுக்கு முன்மாதிரியாக இது அமையும். தற்போதுள்ள கட்டிடம் 1921-ல் கட்டத் தொடங்கி 1927-ல் முடிக்கப்பட்டது. அது ஏறக்குறைய நூறாண்டு பழமைவாய்ந்த பாரம்பரிய கட்டிடமாகும். எனவே புதிய கட்டிடம் கட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x