Published : 20 Jul 2020 08:10 AM
Last Updated : 20 Jul 2020 08:10 AM
கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையில், ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி இதுவரை 180 கிலோ தங்கம் கடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு கடந்த 5-ம் தேதி சில சரக்குப் பெட்டிகள் வந்தன. கேரளாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக முகவரிக்கு வந்திருந்த இந்த சரக்குப் பெட்டிகளை, சந்தேகத்தின் பேரில் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, அதில் ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்து வந்த ஸ்வப்னா சுரேஷ், அவரது நண்பர் சந்தீப் நாயர், பி.எஸ். சரீத், ரமீஸ் ஆகியோரை என்ஐஏ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பாசில் பரீத் என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கிறார்.
அவர் தொடர்பான தகவல்களை பெறும் வகையில், பாசில் பரீத்துக்கு எதிராக புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்குமாறு இன்டர்போல் அமைப்பிடம் என்ஐஏ வேண்டுகோள் விடுத்துள்ளது.
180 கிலோ தங்கம் கடத்தல்
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரிடம் என்ஐஏஅதிகாரிகள் நேற்று விசாரணைமேற்கொண்டனர். திருவனந்தபுரத்தில் உள்ள இருவரது வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு அவர்களை அழைத்துச் சென்ற என்ஐஏஅதிகாரிகள், அங்கு வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதில், 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட அதே பாணியில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி கடந்த காலங்களில் 180 கிலோ தங்கம் கடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 2019-ம் ஆண்டு முதலாக 20 முறை இவ்வாறு தங்கக் கடத்தலில் அவர்கள் ஈடுபட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, கடத்தப்பட்ட தங்கங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் என்ஐஏ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
நம்பிக்கையில்லா தீர்மானம்
முன்னதாக, இந்த வழக்கில் இருந்து ஸ்வப்னா சுரேஷை காப்பாற்ற முயன்றதாக, கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலராக இருந்த சிவசங்கர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதன் பேரில், அவர் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, இந்த கடத்தல் சம்பவத்தில் கேரள முதல்வர் அலுவலகத்துக்கும் தொடர்பு இருப்பதாக காங்கிரஸ், பாஜக ஆகிய எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கேரள அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்கொண்டுவர காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி திட்டமிட்டுள்ளது.
ராஜினாமா செய்ய வலியுறுத்தல்
இதனிடையே, இந்த தங்கக் கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் ராஜினாமா செய்ய வேண்டும் எனஅம்மாநில எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ரமேஷ் சென்னிதாலா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக திருவனந்தபுரத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கேரளாவில் நடந்த தங்கக் கடத்தல் குறித்து எனக்கு எதுவுமே தெரியாது என்று முதல்வர் பினராயி விஜயன் கூறுகிறார். தனது அலுவலகத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் கூடவா ஒரு முதல்வர் இருப்பார்?
தனது அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் இதுபோன்ற பெரிய மோசடிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் அதுபற்றி அறியாமல் முதல்வர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?
இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் கைது செய்வோம் என்றும், அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் முதல்வர் பினராயி விஜயன் கூறுகிறார். அப்படியானால், இந்த வழக்கில் முதல்வர் பினராயி விஜயனையும் போலீஸார் விசாரிக்கவேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்.
இந்த விவகாரத்தில் தார்மீகப் பொறுப்பேற்று, முதல்வர் பதவியிலிருந்து பினராயி விஜயன் விலக வேண்டும். தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறி வழக்கிலிருந்து அவர் தப்ப முடியாது. இவ்வாறு சென்னிதாலா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT