Published : 19 Jul 2020 05:56 PM
Last Updated : 19 Jul 2020 05:56 PM
ஏர் இந்தியா ஊழியர்களுக்கு சம்பளமில்லாத விடுப்பு வழங்கும் முடிவை வாபஸ் பெற வேண்டும் இது மனிதத்தன்மையற்ற செயல் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர் டெரிக் ஓ’பிரையன் மத்திய வான்வழிப்போக்குவரத்து அமைச்சர் ஹர்திப் சிங் பூரிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சருக்கு அவர் எழுதிய கடிதம் வருமாறு:
இந்த கடினமான காலக்கட்டத்தில் இப்படி அறிவிப்பது தன்னிச்சையான செயல். ஊழியர்களுக்கான வாழ்க்கைக்கான உரிமையையும் வாழ்வாதாரத்துக்கான உரிமையையும் பறிக்கும் செயல். தொழிலாளர் உரிமைகள் என்ற லட்சியத்தை இது கடைப்பிடிப்பதாகாது. எனவே சம்பளமில்லா விடுப்பு என்ற இந்த மனிதத்தன்மையற்ற அறிவிப்பை உடனே நீங்கள் வாபஸ் பெற வேண்டும்.
சம்பளமில்லா விடுப்பு என்பது ஜனநாயகமற்ற செயல். மேலும் இதை செயல்படுத்தும் முறையை விட ஜனநாயக மீறல் எதுவும் இருக்க முடியாது. தொழிலாளர்கள் சார்பில் பேசக்கூட ஒருவரும் இல்லை. பிரதிநிதித்துவம் இல்லாத ஆதரவற்றோர் மீது செலுத்தப்படும் பலவந்தமாகும் இது.
லாக் டவுன் காலத்தில் எந்த நிறுவனமும் தொழிலாளர்களுக்கு சம்பள நிறுத்தம் செய்யக் கூடாது என்று உத்தரவிட்ட மத்திய அரசு தானே அதை மீறலாமா?
கரோனா லாக் டவுன் காலத்தில் ஏர் இந்தியா ஊழியர்கள் நாட்டுக்கு ஆற்றிய பணியை கொஞ்சமாவது நினைத்துப் பார்க்க வேண்டும். 150 ஊழியர்களுக்கு கரோனா பாசிட்டிவ். ஆனால் இவர்களை பயன்படுத்தித் தூக்கி எறியும் யூஸ் அண்ட் த்ரோ கொள்கைக்கு மத்திய அரசு இலக்காக்குகிறது. அவர்களுக்கு உரிய நேரத்தில் அவர்களுக்கு சம்பளமும் கொடுப்பதில்லை” என்று வேதனையுடன் உருக்கமாகக் கடிதம் எழுதியுள்ளார்.
முன்னதாக, சம்பளமில்லாத கட்டாய விடுப்பு என்பது மேல்நிலை நிர்வாக அதிகாரிகளைப் பாதுகாத்து மற்றவர்களின் நலன்களைப் புதைப்பதாகும். ஏர் இந்தியாவின் சம்பளமற்ற கட்டாய விடுப்பு என்பது இதுவரை வரலாற்றில் எந்த ஒரு பொதுத்துறை நிறுவனமும் செய்யாதது. இது ஏர் இந்தியாவை வாங்க முயற்சி செய்பவர்களுக்கான மேட்ச் பிக்சிங், வேலையை விட்டு அனுப்புவதையே வேறு ஒரு பெயரில் செய்வதாகும், என்று டெரிக் ஓ’பிரையன் ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த புதனன்று ஏர் இந்தியா தன் ஊழியர்களை 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரையிலும் இதையே 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் விதமாகவும் சம்பளமற்ற விடுப்புக்கு அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT