Published : 19 Jul 2020 02:21 PM
Last Updated : 19 Jul 2020 02:21 PM
விகாஸ் துபோவின் ரத்த வெறி ரவுடி ராஜ்ஜியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ள அதே வேளையில், கான்பூர் மாவட்டத்தில் இருக்கும் மிச்சம் மீதி ரவுடி கும்பலும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என்று கான்பூர் எஸ்எஸ்பி தினேஷ்குமார் கூறியுள்ளார்.
உ.பி. மாநிலம், கான்பூர், பிக்ரு கிராமத்தில் டிஎஸ்பி உள்பட எட்டு போலீஸாரை கொடூரமாகச் சுட்டுக்கொன்ற ரவுடி விகாஸ் கும்பலுக்கு முடிவு கட்டிய தமிழகத்தை சேர்ந்த, கான்பூர் எஸ்எஸ்பி தினேஷ்குமார், ‘இந்து தமிழ்’இணையதளத்துக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் கூறியிருப்பதாவது:
''ரவுடி விகாஸ் பெயரைக் கேட்டாலே கான்பூர் மாவட்ட மக்கள் நடுநடுங்கிப் போயிருந்தனர். வெள்ளந்தி மனம் கொண்ட மக்கள் பெரும்பாலும் ஏழை, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். போதுமான கல்வி அறிவு இல்லாததால், கூலி வேலையில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் ஜீவனம் செய்து வருகின்றனர். பிழைப்புக்கு வழியில்லாத மக்கள் மத்தியில், ரவடி விகாஸ் கும்பல் அட்டூழியங்களைக் கட்டவிழ்த்து விட்டிருந்தது. எதையும் எதிர்க்கத் துணியாத அடித்தட்டு மக்களால், ரவுடி விகாஸ் கும்பல் வைத்ததுதான் சட்டமாக இருந்தது.
தன்னை எதிர்க்கவே ஆளில்லாத தைரியத்தில், அமைச்சர் பொறுப்பில் இருந்தவரைச் சுட்டுக் கொன்ற ரவுடி விகாஸ், சாட்சியமளிக்க எவரும் முன் வராததால், வழக்கில் இருந்து தப்பித்தது அசூர பலத்தைக் கொடுத்தது. அரசியல் ரீதியாகக் கூட, ஒருவரும் எதிர்க்கத் துணிவில்லாததால், ரவுடி விகாஸ் குடும்பத்தைத் தவிர்த்து தேர்தலில் போட்டியிட ஆளில்லை. இவ்வாறு மக்களை ரவுடி விகாஸ் அச்சப்பிடியில் வைத்திருந்தது பெரும் ஆச்சர்யம்.
கான்பூர் மாவட்ட எஸ்எஸ்பி-யாக ஜூன் 19-ம் தேதி நான் பொறுப்பேற்றேன். ஜூலை 2-ம் தேதி டிஎஸ்பி உள்பட எட்டுப் பேரை ரவுடி விகாஸ் கும்பல் சுட்டுக் கொன்றது பெரும் துயரம். கொலை முயற்சி வழக்கு சம்பந்தமாக ரவுடி விகாஸைப் பிடிக்க மூன்று காவல் நிலையங்களைச் சேர்ந்த 45 போலீஸ் படையுடன், டிஎஸ்பி புறப்பட்டுச் சென்றார். இதுபோன்ற பெரும் கொடூரத்தை ரவுடி விகாஸ் கும்பல் நடத்தும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. தீவிரவாதிகளைப் போல, ஒரு ரவுடி கும்பல் போலீஸாரை சுட்டுக் கொன்றது. கடந்த கால வரலாற்றில் இதுபோன்ற நடந்திராத கொடூரச் சம்பவமாகவே இதைப் பார்க்கிறேன்.
அரசியல்வாதிகள், காவல்துறைக்கு அடிபணியாத ரவுடி விகாஸ், போலீஸ் படையை எதிர்கொண்டு சுடும் அளவுக்கு ‘ரத்த வெறி ரவுடி ராஜ்ஜியம்’ விரிந்திருந்ததே இதற்குக் காரணம். தன்னைப் பிடிக்க வரும் போலீஸ் படையை எதிர்கொண்டு காத்திருந்த ரவுடி விகாஸ் கும்பல், திட்டமிட்டு ஃபோகஸ் லைட் பொருத்தி, துப்பாக்கியால் டிஎஸ்பி உள்பட எட்டு போலீஸாரை சுட்டுக் கொன்றனர். ஆயுதங்களை லாவகமாகக் கையாளும் தேர்ச்சி பெற்ற ரவுடி விகாஸ் மற்றும் கூட்டாளிகளைப் பிடிப்பது சவாலான காரியமாக இருந்தாலும், உடனடியாக 44 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சம்பவம் நடந்த ஐந்து மணி நேரத்தில் விகாஸ் துபேவின் இரண்டு கூட்டாளிகளை ‘என்கவுன்ட்டர்’செய்தோம்.
தமிழகத்தில் படித்தவர்கள் அதிகம், ஜனத்தொகை குறைவு. உ.பி.யில் ஜனத்தொகை அதிகம், கல்வி அறிவு கொண்டவர்கள் குறைவு. இதுபோன்ற காரணத்தாலே, இங்கு குட்டி குட்டி ரவுடி கும்பல்கள், மக்களை கொத்தடிமைகளாக நடத்தி வருகிறது. இவ்வாறு குற்றப்பின்னணி கொண்ட ரவுடி கும்பலைக் குறிவைத்து வேட்டையாடி பிடித்து, சட்டத்தின் முன்னிலையில் தகுந்த தண்டனை பெற்றுக் கொடுக்க காவல் துறை முன்னெடுத்துள்ளது. ரவுடி விகாஸ் துபேவின் கூட்டாளிகள் 11 பேர் இன்னும் தலைமறைவாக இருந்து வருகின்றனர். அவர்களைப் பிடிக்க தனிப்படை போலீஸார் தீவிரக் கண்காணிப்பு மற்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். விரைந்து விகாஸ் துபேவின் கூட்டாளிகள் 11 பேரைக் கைது செய்வோம். விகாஸ் துபோவின் ரத்த வெறி ரவுடி ராஜ்ஜியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ள அதே வேளையில், கான்பூர் மாவட்டத்தில் இருக்கும் மிச்சம் மீதி ரவுடி கும்பலும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள்.
ரவுடி விகாஸ் துபேவின் மனைவி ரிச்சா லக்னோவில் தனியாக வசித்து வருகிறார். டிஎஸ்பி உள்பட எட்டு போலீஸார் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும் அவருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. அதன் காரணமாகவே அவர் மீது கைது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. விகாஸ் துபேவுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒருவர் கல்லூரியிலும், மற்றொரு மகன் பள்ளியிலும் படித்து வருகிறார்கள். இவர்கள் எவ்வித குற்றப்பின்னணியும் கொண்டவர்கள் அல்ல. விகாஸ் துபே வெளிநாடுகளில் வாங்கிக் குவித்துள்ள சொத்துகள் குறித்து அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரவுடி விகாஸ் துபே கும்பலுக்கு முடிவு கட்டிய காவல் துறையின் பணியை பொதுமக்கள் மெச்சிப் பாராட்டி வருகின்றனர். நல்ல உள்ளம் படைத்த கான்பூர் மக்கள், அதிகாரிகளின் நேர்மையான நடவடிக்கைக்கு பக்கபலமாகவும், ஒத்துழைப்பு அளிப்பவர்களாகவே உள்ளனர். மிகுந்த மரியாதையுடன் நடந்துகொள்ளும் பொதுமக்கள், அரசு அதிகாரிகள் செய்யும் உதவிகளைப் பெரிதும் நம்பியுள்ளனர்.
ரவுடி விகாஸ் துபே சம்பவத்தால் பெருமைப்பட்டுக் கொள்வதைக் காட்டிலும், இன்னும் பொறுப்புணர்வுடன், நேர்மையான முறையில் கடமை உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியுள்ளது. வரும் காலங்களில் மேலும் சிறப்பாகப் பணியாற்றி, நான் பிறந்த தமிழ் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பது நிச்சயம்''.
இவ்வாறு கான்பூர் எஸ்எஸ்பி தினேஷ்குமார் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT