Published : 19 Jul 2020 01:53 PM
Last Updated : 19 Jul 2020 01:53 PM

'மாயை உடையும், உரிய விலை கொடுப்பீர்கள்': 3 அம்சங்களை குறிப்பிட்டு மத்திய அரசு மீது ராகுல் காந்தி விமர்சனம்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம்

புதுடெல்லி

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான மத்திய அரசு பொய்களையே உண்மையாக கூறுகிறது என்று கூறிய 3 அம்சங்களைக் குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுத்தல் விவகாரம், எல்லையில் இந்தியா, சீன ராணுவம் மோதல் போன்ற விவகாரங்களில் மத்தியஅரசை தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார்.

இந்திய எல்லைப்பகுதியை சீனா ஆக்கிரமித்துவிட்டது என்று தொடர்ந்து ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார். ஆனால், மத்திய அரசு இ்ந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது.

கடந்த இரு நாட்களுக்குமுன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் லடாக் எல்லைப்பகுதிக்கு பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்யச் சென்றிருந்தார். அங்கு வீரர்கள் மத்தியில் பேசிய ராஜ்நாத் சிங், “ இந்தியா பலவீனமான நாடு கிடையாது. இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைக்கூட தொடுவதற்கு உலகில்எந்த சக்தியும் இல்லை. சீனாவுடன் அமைதிப்பேச்சு நடந்து வருகிறது. அது சமாதானமாகப் போவதற்கு எந்த உறுதியும் இல்லை” எனத் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசிய இந்த வீடியோவை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இணைந்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதில் “ நம்முடைய நிலத்தை சீனா எடுத்துக்கொண்டது. ஆனால் இந்திய அரசோ "பிரபுக்கள் மனநிலையில்" மிகவும் சொகுசாக நடந்து கொள்கிறது. இவ்வாறு நடந்துகொண்டால், சீனாவுக்கு இன்னும் துணிச்சல் அதிகரிக்கும்.

மத்திய அரசின் கோழைத்தனமான நடவடிக்கையால், இந்தியா மிகப்பெரிய விலை கொடுக்கப்போகிறது” என விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் ராகுல் காந்தி இன்று காலை மற்றொரு ட்விட்டர் பதிவில் பாஜக பொய்களை நிறுவனமயமாக்கி வருகிறது, அதாவது பொய்களை உண்மை என்பதாகக் காட்டி வருகிறது என்று சாடியுள்ளார்.

மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில் அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நாளேட்டின் லிங்க்கையும் இணைத்துள்ளார்.

வாஷிங்டன் போஸ்ட் நாளேடு செய்தியில் “ இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று 10 லட்சத்தைக் கடந்துள்ளது. ஆனால், உயிரிழப்பு அதிகரிக்காமல் இருப்பது மர்மமாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளது.

இந்த ட்விட்டரில் ராகுல் காந்தி பதிவிட்ட கருத்தில் மூன்று அம்சங்களை குறிப்பிட்டு பாஜகவை விமர்சித்துள்ளார், அதில் “ பாஜக பொய்களை நிறுவனமயமாக்கி வருகிறது.

  1. பரிசோதனை மூலம் கரோனா பரவலைக் கட்டுபடுத்திவிட்டோம் என்றும், உயிரிழப்பு குறித்து பொய்யான அறிக்கைகளையும் வெளியிடுகிறது
  2. புதிய கணக்கீடு முறையின் மூலம் நாட்டின் பொருளாதா வளர்ச்சி ஜிடிபி கணக்கிடுவது.
  3. ஊடகங்களை மிரட்டி, சீனாவின் ஆக்ரோஷத்தை மக்களிடம் கொண்டு செல்லவிடாமல் செய்தது.

இந்த 'மாயை உடையும், உரிய விலை கொடுப்பீர்கள்'
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x