Published : 19 Jul 2020 12:53 PM
Last Updated : 19 Jul 2020 12:53 PM
தாமதம் மற்றும் பிற காரணங்களினால் ரூ.150 கோடி அல்லது அதற்கும் கூடுதல் தொகை கொண்ட சுமார் 401 உள்கட்டமைப்புத் திட்டங்களின் செலவு கூடுதலாக ரூ.4.02 லட்சம் கோடி அதிகரித்துள்ளதாக புள்ளி விவர அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
மத்திய புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ரூ.150 கோடி மற்றும் அதற்கும் மேலாக செலவாகும் உள்கட்டமைப்பு திட்டங்களைக் கண்காணித்து வருகிறது.
இத்தகைய 1,692 உள்கட்டமைப்பு திட்டங்களில் 401 திட்டங்களின் செலவினம் ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு அதிகரிக்க, 552 திட்டங்கள் காலக்கெடுவை தாண்டி சென்றுள்ளது.
இது தொடர்பாக அமைச்சகத்தின் ஜனவரி 2020 அறிக்கை கூறுவதென்னவெனில், “1692 திட்டங்களை நடைமுறைப்படுத்த ஆகும் மொத்த செலவு 20 லட்சத்து 75 ஆயிரத்து 212.70 கோடியாகும். இந்தத் திட்டங்களை பூர்த்தி செய்யும் போது அதன் செலவினம் 24 லட்சத்து 78 ஆயிரத்து 16.75 ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மொத்த கூடுதல் செலவு ரூ.4 லட்சத்து 2 ஆயிரத்து 803.75 கோடி ஆகும். அதாவது தொடக்க செலவை விட 19.71% அதிகம்” என்று தெரிவிக்கிறது.
இந்தத் திட்டங்களின் மீது ஜனவரி 2020 வரை மேற்கொண்ட செலவுகள் ரூ. 10 லட்சத்து 97 ஆயிரத்து 604 கோடியாகும். இது திட்டத்தின் எதிர்பார்க்கப்பட்ட செலவில் 44.29% ஆகும்.
தாமதமான 552 திட்டங்களில் 162 திட்டங்கள் ஒட்டுமொத்தமாக தாமதமாகியுள்ளது. அதாவது ஒன்று முதல் 12 மாதங்கள் வரை தாமதமாகியுள்ளது. 125 திட்டங்கள் 13 முதல் 24 மாதங்கள் தாமதமாகியுள்ளது, 145 திட்டங்கள் 25 முதல் 60 மாதங்கள் வரை தாமதத்தை பிரதிபலிக்கிறது. 114 திட்டங்கள் 61 மாதங்களுக்கு மேலாக தாமதமாகி வருகிறது.
இந்த 552 திட்டங்களின் சராசரி தாமத நேரம் 39.71 மாதங்களாகும்.
உள்கட்டமைப்புத் திட்டங்கள் தாமதம் மற்றும் அதையொட்டிய செலவு அதிகரிப்புக் காரணமாக நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள், வன மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி வாங்குவதில் தாமதம், உள்கட்டமைப்பு ஆதரவு தொடர்புகள் இன்மை ஆகியவை கூறப்பட்டுள்ளன.
இதைத்தவிர, திட்ட நிதி தொடர்பான சிக்கல்கள், விரிவான பொறியியல் திட்டம் சமர்ப்பிப்பு தாமதம், டெண்டர் தாமதம், சட்டம் ஒழுங்கு பிரச்சினை, நிலவியல் தொடர்பான சில ஆச்சரியங்கள், ஒப்பந்தச் சிக்கல்கல் ஆகியவையும் காரணம் எனக் கூறப்படுகிறது.
மேலும் திட்ட முகமைகள் திருத்தப்பட்ட அல்லது அதிகரிக்கப்பட்ட உத்தேச செலவுகளை சமர்ப்பிக்கவில்லை. திட்ட நடைமுறை செயலாக்க கால அட்டவணையையும் வழங்கவில்லை. ஆகவே திட்டங்களின் கூடுதல் செலவாகக் காட்டப்பட்டது காட்டப்பட்டதை விட கூடுதலாகவே இருக்கும், தாமதம் சொல்லப்பட்டதை விட அதிக காலமாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT