Published : 19 Jul 2020 08:06 AM
Last Updated : 19 Jul 2020 08:06 AM
இந்திய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறலில் ஈடுபட்டால் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார்.
இமயமலையின் லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைய முயன்றதை அடுத்து இரு நாடுகளுக்கு இடையேகடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக பதற்றம் நிலவுகிறது. இந்தியாவும், சீனாவும் லடாக் எல்லையின் பல்வேறு பகுதிகளில் தங்கள் ராணுவத் துருப்புகளை குவித்ததால் போர் மூளும் அபாயமும் ஏற்பட்டது.
இந்த பதற்றத்தை தணிப்பதற்காக இரு நாடுகள் இடையே ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலும், வெளியுறவுத் துறை அமைச்சர்கள் நிலையிலும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதன் விளைவாக, லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, கோக்ரா உள்ளிட்ட பகுதிகளில் சீன ராணுவப் படைகள் பின்வாங்கியுள்ளன.
இந்த சூழலில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் லடாக் சென்றார். அங்கு இந்திய ராணுவத்தின் தயார் நிலையை ஆய்வு செய்த அவர், லே பகுதியில் நடைபெற்ற போர் ஒத்திகையையும் பார்வையிட்டார்.
காஷ்மீரில் ஆய்வு
இந்நிலையில், தனது சுற்றுப்பயணத்தின் இரண்டாம் நாளான நேற்று, காஷ்மீர் எல்லையில் உள்ள கரண் பகுதிக்கு சென்றராஜ்நாத் சிங், அங்கு ராணுவம் மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும், ரோந்துப் பணிகளையும் ஆய்வு செய்தார். அவருடன் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவத் தளபதி எம்.எம். நரவானே ஆகியோரும் உடனிருந்தனர்.
அப்போது ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடிய ராஜ்நாத் சிங், “இந்திய எல்லையில் பாகிஸ்தான் ஏதேனும் அத்துமீறலில் ஈடுபட்டால் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.
அமர்நாத் கோயிலில் பிரார்த்தனை
கரண் பகுதியில் ஆய்வுப் பணிகளை முடித்த பின்னர், இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலுக்கு சென்ற ராஜ்நாத் சிங் அங்கு சிறிது நேரம் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT