Published : 19 Jul 2020 08:05 AM
Last Updated : 19 Jul 2020 08:05 AM
கரோனா தொற்று பரவாமல் இருக்ககடந்த மார்ச் 20-ம் தேதி முதல்,ஜூன் 10-ம் தேதி வரை திருப்பதிஏழுமலையான் கோயிலில் சுவாமிதரிசனம் ரத்து செய்யப்பட்டது. பின்னர் ஜூன் 11-ம் தேதி முதல்பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆந்திராவில் கரோனா தொற்று தற்போது வேகமாக பரவத் தொடங்கி உள்ளது. திருப்பதி நகரில் மட்டும் தினமும் 250 முதல் 300 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே திருமலையில் பணியாற்றும் 18 அர்ச்சகர்கள், நாதஸ்வர, தவில் வித்வான்கள், முடி காணிக்கை கொடுக்கும் இடத்தில் பணியாற்றும் ஊழியர்கள், பாதுகாப்பு போலீஸார், தேவஸ்தான பாதுகாப்பு ஊழியர்கள் என 158 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் திருமலை மற்றும் திருப்பதியில் கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் நேற்று காலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பெரிய மற்றும் சிறிய ஜீயர்கள் இருவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இவர்கள் திருப்பதியில் உள்ள ‘சிம்ஸ்’ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சதுர்மாத விரதத்தில் இருப்பதால் இவர்கள் இருவரும் திருப்பதி எல்லையை கடக்க மாட்டோம் எனக் கூறி விட்டதால், திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் அருகே உள்ள இவர்களது மடம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோயிலில் பக்தர்களுக்கு தரிசனத்தை ரத்து செய்து, அர்ச்சகர்களின் உடல்நலனில் அக்கறை செலுத்த நடவடிக்கை வேண்டுமென தேவஸ்தான ஆகம சாஸ்திர ஆலோசகரும், முன்னாள் பிரதான அர்ச்சகருமான ரமண தீட்சிதர் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் ஊழியர் சங்க நிர்வாகிகள், பாஜக, தெலுங்குதேசம் கட்சியினரும் பக்தர்களுக்கு தரிசனத்தை சில நாட்களுக்கு ரத்து செய்வது நல்லது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முதல்வரின் உத்தரவுக்காக..
இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, "தேவஸ்தான ஜீயர்களுக்குகரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இருவரின் உடல்நலனும் நன்றாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தேவைப்பட்டால், சென்னைக்கு அழைத்துச் சென்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும். ஏற்கெனவே 18 அர்ச்சகர்கள் உட்பட 158 ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏழுமலையான் கோயிலில் தரிசனத்தை ரத்து செய்யலாமா? வேண்டாமா? என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. இதுகுறித்து முதல்வர் ஜெகன்மோகனுக்கும் தெரியப்படுத்தி உள்ளோம். அரசுதனது முடிவை விரைவில் தெரிவிக்கும் என காத்திருக்கிறோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT