Published : 19 Jul 2020 07:49 AM
Last Updated : 19 Jul 2020 07:49 AM
ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசில் முதல்வராக இருக்கும் அசோக் கெலாட் ஆட்சியைக் கவிழ்க்க சதித்திட்டம் தீட்டும் வகையில் இரு ஆடியோக்கள் வெளியானது குறித்து விளக்கமான அறிக்கை அளிக்கக் கோரி மாநிலத் தலைமைச் செயலாளருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக்கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட், பாஜகவுடன் இணைந்து ஆளும் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக முதல்வர் அசோக் கெலாட்டும், அவரது ஆதரவாளர்களும் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், அங்கு அண்மையில் நடைபெற்ற இரண்டு காங்கிரஸ் கூட்டங்களில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் கலந்துகொள்ளவில்லை. இதனைக் காரணம் காட்டி, சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவியும், மாநிலத் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது. மேலும், அவர்களை தகுதிநீக்கம் செய்வது தொடர்பாக மாநிலசட்டப்பேரவைத் தலைவர் சி.பி. ஜோஷி நோட்டீஸும் வழங்கினார்.
இதற்கிடையே பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான கஜேந்திர சிங் ஷெகாவத், காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ பன்வாரி லால் சர்மா, சஞ்சய் ஜெயின் ஆகியோர் அசோக் கெலாட் ஆட்சியை கவிழ்கக் பேரம் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ டேப்பை வெளியிட்ட காங்கிரஸ் கட்சி அவர்களைக் கைது வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
மேலும், காங்கிரஸ் கட்சியின் கொறடா ஜோஷி, மாநில ஊழல் ஒழிப்பு போலீஸாரிடம் ஆடியோ டேப்பில் இருக்கும் பேசப்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் அடிப்படையில் ராஜஸ்தான் போலீஸார் இரு வழக்குகள் பதிவு செய்து சஞ்சய் ஜெயின் என்பவரை மட்டும் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து ஊழல் ஒழிப்பு பிரிவின் டிஜிபி அலோக் திரிபாதி கூறுகையில் “ காங்கிரஸ் கொறடா அளித்த புகாரின் அடிப்படையில் இரு வழக்குப்பதிவு செய்து, சஞ்சய் ஜெயின் என்பவரைக் கைது செய்துள்ளோம்.
முதல் தகவல் அறிக்கையில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ பன்வாரிலால் சர்மா ஆகியோர் பேசியதாகவும், அதில் மூன்றாவது நபர் சஞ்சய் ஜெயின் பேசிய விவரத்தையும் குறிப்பிட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்
ஆடியோ டேப் விவகாரம் கருத்து தெரிவித்த பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில், “ ராஜஸ்தானில் வெளியாகியுள்ள ஆடியோ டேப் புனையப்பட்ட ஒன்று. சட்டவிரோதமான வகையில் அரசியல்வாதிகளின் செல்போன் அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளன.
இதில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இந்த ஆடியோ விவகாரம் உண்மையானது என்று முதல்வர் கெலாட், காங்கிரஸ் தலைவர்கள் கூறுகிறார்கள். ஆனால், போலீஸார் முதல்தகவல் அறிக்கையில் அது உண்மையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது “ எனத் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி “ ராஜஸ்தானில் நிலையற்ற ஆட்சி நடந்து வருவதாலும்,சட்டத்துக்கு விரோதமான வகையில் அரசியல்வாதிகளின் செல்போன் அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்படுவதாலும் ஜனநாயகம் ஆபத்துக்குள்ளாகியுள்ளது.
ஆதலால், ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பரிந்துரைக்கவேண்டும்” என வலியுறத்தியிருந்தார்.
ஆடியோ டேப் விவகாரம் நாளுக்குநாள் பெரிதாகிக்கொண்டே செல்வதால், ஆடியோ டேப் விவகாரம் குறித்து முழுமையான அறிக்கையை அனுப்ப வேண்டும் என்று ராஜஸ்தான் தலைமைச் செயலாளருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆடியோ டேப் விகாரம் குறித்த முழுமையான தகவல்களையும் அளிக்குமாறு அதிகாரிகளுக்கு தலைமைச்செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT