Published : 18 Jul 2020 10:22 PM
Last Updated : 18 Jul 2020 10:22 PM

காலம் கடந்தும் வாழும் இந்திய நற்பண்புகள்: வெங்கய்ய நாயுடு பெருமிதம்

புதுடெல்லி

ஒரே குடும்பமாக வசித்தல் மற்றும் ஒன்றாகப் பணியாற்றுதல் என்ற இந்தியாவின் பழம்பெருமை மிக்க கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்து ஊக்குவிக்க வேண்டும் என குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

மைசூரு அரச குடும்பத்தின் 25வது மகாராஜாவான ஸ்ரீ ஜெய சாமராஜ உடையாரின் நூற்றாண்டு கொண்டாட்ட நிறைவு விழாவில், காணொலிக் காட்சி மூலம் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், மகாராஜா ஜெயசாமராஜ உடையார் போன்ற அறிவாற்றல், ஞானம், தேசப்பற்று மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைசிறந்த ஆட்சியாளர்களும், நிர்வாகிகளும்தான், இந்த நாட்டின் வரலாற்றை வடிவமைத்துள்ளதாகக் கூறினார்.

ஸ்ரீ ஜெய சாமராஜ உடையார் ஒரு தலைசிறந்த நிர்வாகி என்று குறிப்பிட்ட குடியரசு துணைத்தலைவர், சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில், வலிமைமிக்க, தற்சார்புடைய மற்றும் முற்போக்கான மாநிலங்களில் ஒன்றை உருவாக்கியவர் அவர் என்றார்.

இந்தியாவை வலிமையான ஜனநாயக நாடாக மாற்றியமைக்கவும், நாட்டின் ஒற்றுமைக்காகவும், ஒருமைப்பாட்டிற்காகவும் அளப்பறிய பங்காற்றியவர் மைசூரு மகாராஜா என்று புகழாரம் சூட்டிய குடியரசு துணைத்தலைவர், பண்டைக்கால நற்பண்புகள் மற்றும் நாகரீகம் ஆகியவற்றின் கலவையாக திகழ்ந்தவர் அவர் என்றும் குறிப்பிட்டார்.

அர்த்தசாஸ்திரத்தில் சாணக்கியர் குறிப்பிட்ட பல்வேறு விதமான குணாதிசயங்களைக் கொண்ட முன்மாதிரி மன்னராகத் திகழ்ந்தவர் அவர் என்றும் கூறினார்.

தொழில்முனைவோருக்கு மிகவும் உறுதுணையாகத் திகழ்ந்த ஸ்ரீ ஜெய சாமராஜ உடையார், நாட்டில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்தவும், அறிவியல் சிந்தனையை வளர்க்கவும் அயராத முயற்சி மேற்கொண்டவர் என்றும் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

குறிப்பிடத்தக்க தத்துவ அறிஞர், இசை ஆர்வலர், அரசியல் சிந்தனையாளர் மற்றும் மக்கள் தலைவரான உடையார், பல்துறை மேதையாகவும், வாழ்நாள் முழுவதும் கற்றறிந்து கொள்பவராகவும் திகழ்ந்தார் என்றும் குடியரசு துணைத்தலைவர் குறிப்பிட்டார்.

கலை, இலக்கியம், கலாச்சாரத்தைப் போற்றி வளர்ப்பதில் தன்னிகரற்றவராக திகழ்ந்ததால், ‘தக்சின போஜா‘ என்று அழைக்கப்பட்டவர் அவர் என்றும் குடியரசு துணைத்தலைவர் சுட்டிக்காட்டினார்.

சமஸ்கிருத மொழியில் பாண்டித்யம் பெற்றிருந்தவர் ஜெய சாமராஜா என்றும், தலைசிறந்த பேச்சாற்றல் கொண்டவர் என்றும் பாராட்டிய வெங்கய்ய நாயுடு, அவர் எழுதிய ‘ஜெய சாமராஜ கிரந்த ரத்ன மாலா‘ என்ற தொடர், கன்னட மொழி மற்றும் இலக்கியத்தை செழிப்புறச் செய்ததாகவும் தெரிவித்தார்.

காலம் கடந்தும் வாழும் இந்திய நற்பண்புகள், செழுமை வாய்ந்த கலாச்சார பாரம்பரியத்துடன், ஜனநாயகம், மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி முறையை, இந்த சிறப்புமிக்க தருணத்தில் நாம் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டுமெனவும் குடியரசு துணைத்தலைவர் கேட்டுக் கொண்டார்.

‘பகிர்ந்து கொள்ளுதல், கவனித்துக்கொள்ளுதல்’ என்ற இந்தியாவின் அடிப்படை தத்துவத்தை, நாட்டிற்கும், உலகிற்கும், ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் பயன்படும் விதமாக, ஒரே குடும்பமாக வசித்தல், ஒன்றாகப் பணியாற்றுதல் என்ற இந்தியாவின் பழம்பெருமைமிக்க கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்து, ஊக்குவிப்பதை முழுமையாகப் பின்பற்றுமாறு குடியரசு துணைத்தலைவர் எம்.வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x