Published : 18 Jul 2020 08:04 PM
Last Updated : 18 Jul 2020 08:04 PM
அயோத்தியில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜைக்காக தேதி ஒதுக்கக் கோரி பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர டிரஸ்ட் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியும், கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.
அதுமட்டுமல்லாமல் அயோத்தியில் 5 ஏக்கர் நிலத்தை மசூதி கட்டுவதற்காக உத்தரப் பிரதேச அரசு சன்னி வக்பு வாரியத்துக்கு ஒதுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ஏற்பாடு செய்யப்பட்ட பணிகள் நிறுத்தப்பட்டன. அதன்பின் கடந்த ஜூன் மாதத்திலிருந்து ராமர் கோயில் கட்டுமானத்துக்கான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.
இந்நிலையில் ராமர் ஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்படுகிறது. இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கவும், திட்டமிடவும் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை இன்று கூடியது.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் சார்பில் காமேஷ்வர் சவுபல் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையில், ‘‘பிரதமர் அலுவலகத்திற்கு ஆகஸ்ட் 3 மற்றும் ஆகஸ்ட் 5 ஆகிய தேதிகளை அனுப்பியுள்ளோம். பிரதமர் ஒப்புதல் அளிக்கும் தேதியில் பூமி பூஜைக்காக நடைபெறும்’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT