Last Updated : 18 Jul, 2020 03:40 PM

1  

Published : 18 Jul 2020 03:40 PM
Last Updated : 18 Jul 2020 03:40 PM

மனிதர்கள் மீதான கரோனா தடுப்பு மருந்துப் பரிசோதனை 7 மாதங்களில் முடியும்: ஜைடஸ் கெடிலா நிறுவனம் தகவல்

கோப்புப்படம்

புதுடெல்லி

கரோனா வைரஸுக்கு எதிராக 2-வது தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ள ஜைடஸ் கெடிலா நிறுவனம், மனிதர்கள் மீதான கிளினிக்கல் பரிசோதனையை அடுத்த 7 மாதங்களில் முடித்துவிடுவோம் என்று அறிவித்துள்ளது.

ஏற்கெனவே பாரத் பயோடெக் நிறுவனம் கிளினிக்கல் மனிதர்கள் பரிசோதனையைத் தொடங்கி 375 பேருக்கு மருந்தைச் செலுத்திப் பார்த்துள்ளது. அதில் பெரும்பாலானோருக்கு எதிர்மறையானபாதிப்பு ஏதும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸுக்கு எதிராகத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இந்திய அளவில் 7 மருந்து நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அதில் பாரத் பயோடெக், ஜைடஸ் கெடிலா ஆகிய இரு நிறுவனங்களுக்கு மட்டும் மனிதர்கள் மீதான கிளினிக்கல் பரிசோதனை நடத்த மத்திய மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை அனுமதியளித்துள்ளது.

இதில் ஜைடஸ் கெடிலா நிறுவனம் ஜைகோவ்-டி எனும் கரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்தை மனிதர்கள் மீதான கிளினிக்கல் பரிசோதனையில் முதல் கட்டம் மற்றும் 2-வது கட்டத்தை ஆயிரத்து 48 பேர் மீது பரிசோதிக்க இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியளித்தது. இதன்படி இந்த கிளினிக்கல் பரிசோதனை தொடங்கி நடந்து வருகிறது.

இந்திய கிளினிக்கல் பரிசோதனை முயற்சியின்படி இரு கட்டங்களாக மருந்தின் தன்மை பரிசோதிக்கப்பட உள்ளன.

இதுகுறித்து ஜைடஸ் கெடிலா நிறுவனத்தின் தலைவர் பங்கஸ் ஆர்.படேல் விடுத்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அளித்த அனுமதிக்குப் பின் கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தின் மனிதர்கள் மீதான கிளினிக்கல் பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசோதனை இரு கட்டங்களாக அடுத்த 3 மாதங்களுக்கு நடைபெறும்.

இந்தப் பரிசோதனையில் கிடைக்கும் முடிவுகள், புள்ளிவிவரங்கள் மூலம் மருந்து ஆக்கபூர்வமாக இருக்கிறதா என்பது அறிய முடியும். ஒட்டுமொத்தமாக மனிதர்கள் மீதான பரிசோதனை முடிய 7 மாதங்கள் ஆகும். அதன்பின்புதான் தடுப்பு மருந்து சந்தையில் அறிமுகமாகும். இந்த மருந்தின் பரிசோதனை முடிந்ததும் இந்தியாவில்தான் முதலில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

உலகம் முழுவதும் பல்வேறு மருந்து நிறுவனங்கள் எங்களுடன் கூட்டு சேர விருப்பம் தெரிவித்துள்ளன என்றாலும், இப்போதுள்ள நிலையில் எந்த முடிவும் எடுக்கவில்லை''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஜைடஸ் கெடிலா நிறுவனம் தயாரிக்கும் மருந்து 2021-ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குப் பின்புதான் மக்களுக்கு அறிமுகமாகும் என்பது தெரியவந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x