Published : 18 Jul 2020 03:05 PM
Last Updated : 18 Jul 2020 03:05 PM
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஓராண்டுக் காலத்துக்குள் இருப்பதால் மேற்கு வங்கத்தில் அரசியல் சூடு பிடித்துள்ளது.
தங்கள் ஆட்சி மீதான மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தங்கரின் சமீபத்திய விமர்சனங்கள் பாஜகவின் தேர்தல் திட்டத்தின்பாற்பட்டது என்பதை தாங்கள் புரிந்து கொள்வதாக மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேலும் ஆளுநரை ‘அரசியல் ரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும்’ எதிர்கொள்வோம் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கவர்னராக தங்கர் பொறுப்பேற்றுக் கொண்டது முதலே அரசுக்கும் அவருக்குமான மோதல் பெரிய அளவில் சென்று கொண்டிருக்கிறது.
இங்கு மட்டுமல்ல, புதுச்சேரி, டெல்லி உட்பட மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கவர்னர்கள் மத்திய பாஜக ஆதரவாகச் செயல்படுவதாக மாநில மற்றும் சில யூனியன் பிரதேச முதல்வர்கள், அமைச்சர்கள் குற்றம்சாட்டி வருவதும் வழக்கமாகி வருகிறது.
ஆனால் மம்தா பானர்ஜி கவர்னருக்கு விடுத்த செய்தியில், “நாங்கள் இன்னமும் கூட அனைத்தையும் பொறுத்துக் கொண்டுதான் இருக்கிறோம். மாண்புமிகு கவர்னர் அவர்களுக்கு என்னுடைய எளிமையான கோரிக்கை என்னவெனில் மிகவும் அதிகமாகச் செல்லாதீர்கள். எங்கள் மீது அழுத்தத்தை அதிகரித்தால் நாங்கள் அரசியல் ரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும், அமைதியான முறையிலும் எதிர்கொள்ள வேண்டிவரும்” என்று தெரிவித்துள்ளார்.
பாஜக எம்.எல்.ஏ. தற்கொலை செய்து கொண்ட விவகாரமும் பல்கலைக் கழக துணைவேந்தர்களை வீடியோ கான்பரன்சிங்கில் கலந்து கொள்ள கவர்னர் இட்ட உத்தரவும் தற்போது மேலும் இருதரப்பினரிடையே சிக்கல்களை அதிகப்படுத்தியுள்ளது.
பாஜக எம்.எல்.ஏ. தேவேந்திர நாத் ராய் உத்தர் தினஜ்பூரில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியதாக செய்திகள் வெளியாகின. இதனையடுத்து பாஜக தலைவர்கள் சிலர் கவர்னரைச் சந்தித்து இது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரினர். அரசியல்வாதிகளை சந்தித்த பிறகு கவர்னர் தங்கர் ட்விட்டரில் இது அரசியல் படுகொலை என்று வர்ணித்தார். மேலும் இதை விசாரிக்கும் போலீசார் அரசியல் வற்புறுத்தலில் பணியாற்றுவதாகவும் சாடினார்.
இதோடு, மாநில பல்கலைக் கழக துணைவேந்தர்கள் அமைப்பு ஜூலை 13 மற்றும் 14 தேதிகளில் கவர்னரிடமிருந்து தங்களுக்கு வந்த கடிதங்களின் மொழி நாராசமாகவும் அச்சுறுத்தும் விதமாகவும் இருந்ததாகக் குற்றம்சாட்டினர். இந்தக் கடிதங்கள் துணை வேந்தர்களின் கவுரவத்துக்கு இழுக்கு சேர்ப்பதாக உள்ளது என்று வருத்தம் தெரிவித்தனர்.
மேலும் மாநில உயர்கல்வித் துறை வழியாக அழைப்பு விடுக்கப்பட்டாலே தவிர கவர்னர் அழைப்பு விடுத்த கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று போர்க்கொடி உயர்த்தினர். இதனையடுத்து கவர்னர் தங்கர், மாணவர்கள் படிப்பு விவகாரம் அரசியலாக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்று ட்வீட் செய்தார்.
இந்நிலையில் மம்தா பானர்ஜி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது, “என்னை தூண்டிவிட்டாலே தவிர நான் யாருக்கு எதிராகவும் கொந்தளிக்க மாட்டேன். என் கைகளில் உள்ள ஆவணங்கள் கவர்னர் கேள்விகளுக்கு நாங்கள் அளித்த விளக்கங்களாகும். இதோடு கல்வி அமைச்சரும் கவர்னரைச் சந்தித்தார். தலைமை செயலரும் சந்தித்தார். கவர்னரிடம் நானே ஒருநாளில் 4 முறை பேசினேன், என்னிடம் போன் பதிவுகள் உள்ளன. ஆனால் அவர் கூறுகிறார் நாங்கள் அவர் அழைப்பை புறக்கணிக்கிறோம் என்று.
நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், அவர் பதவி நாற்காலிக்குரிய மரியாதையை நாங்கள் அளிக்க வேண்டும். ஆனால் எங்களுக்கும் அவர் கொஞ்சம் மரியாதை காட்ட வேண்டும். நாங்கள் என்ன அவர் வைத்த வேலையாட்களா?
மத்திய அமைச்சராக நான் நாடு முழுதுக்குமாகப் பணியாற்றிய அனுபவம் பெற்றவள். நான் இன்னும் கவர்னரை பொறுத்துக் கொண்டுதான் இருக்கிறேன், ஆனால் அவர் பயன்படுத்தும் மொழி மோசமாக உள்ளது, ஏற்றுக் கொள்ள முடியாதது. நான் அதிர்ச்சியடைந்தேன், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவரை விடவும் மோசமான மொழியைப் பிரயோகிக்கிறார். நாங்கள் ஜனநாயக ரீதியாக, அரசியல் ரீதியாக அமைதியான வழியில் அவரை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.
பாஜக எம்.எல்.ஏ. தற்கொலை இதுவரை அப்படித்தான் தெரியவருகிறது. பண விவகார கோணத்திலும் விசாரணை நடக்கிறது. ஆளுநர் இதனை அரசியல் படுகொலை என்று கூறினால் அவர் அதை நிரூபிக்க வேண்டும், இல்லையெனில் அவர் மீதான நம்பகத்தன்மை போய்விட்டது என்று பதவி விலக வேண்டும்.
அவர் நல்ல ஆரோக்கியத்துடனும் மன அமைதியுடனும் இருக்க வேண்டும். தேர்தல் இன்னும் தொலைவில் தான் உள்ளது கவர்னர் அவர்களே அதுவரை ரிலாக்ஸாக இருங்கள்” என்று மம்தா கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT