Published : 18 Jul 2020 01:49 PM
Last Updated : 18 Jul 2020 01:49 PM
நாட்டில் கரோனா வைரஸ் இன்னும் தீவிரமாகப் பரவி வரும் நிலையில் அடுத்துவரும் இடைத்தேர்தல்கள், சட்டப்பேரவைத் தேர்தல்களில் எவ்வாறு தேர்தல் பிரச்சாரம் செய்வது என்பது குறித்த கருத்துகளையும், ஆலோசனைகளையும் தெரிவிக்கக் கோரி அனைத்து தேசியக் கட்சிகளுக்கும், மாநிலக் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் வரும் 31-ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டில் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் தீவிரமைடந்துகொண்டே வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றால் ஒட்டுமொத்தமாக 10 லட்சத்து 38 ஆயிரத்து 716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 26 ஆயிரத்து 273 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சூழலில் பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன.
இந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதத்தில் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற உள்ளது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சமூக விலகல் முக்கியம் என்பதால், தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் செய்வது, அரசியல் கட்சிக் கூட்டங்கள் நடத்துவது, வாக்களிப்பது போன்றவற்றில் பல்வேறு சிரமங்கள், குழப்பங்கள் நேரிடும். இதையடுத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனையைக் கேட்டு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
இந்தக் கடிதத்தில் தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது:
''நாட்டில் கரோனா வைரஸ் சூழல் என்ன என்று அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தெரிந்திருக்கும். கரோனா வைரஸ் காலத்தில் பின்பற்ற வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விதிமுறைகள் குறித்து தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டப்படி மத்திய அரசும், மாநில அரசுகளும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன.
கட்டாயமாகப் பின்பற்ற வேண்டிய சில தடுப்பு முறைகளும் உள்ளன. குறிப்பாக, பொது இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிவது, சமூக விலகல், பொது இடங்கள், விழாக்கள், கூட்டங்கள் போன்றவற்றில் குறைந்தபட்ச இடைவெளியைத் தனி மனிதர்களுக்கு இடையே பின்பற்றுவது, தெர்மல் ஸ்கேனிங், கிருமிநாசினி தெளிப்பு போன்றவை உள்ளன.
இவை அனைத்தையும் மனதில் வைத்து, வரும் காலத்தில் நடக்கும் இடைத்தேர்தல்கள், சட்டப்பேரவைத் தேர்தல்கள் போன்றவற்றில் அரசியல் கட்சிகள் எவ்வாறு தேர்தல் பிரச்சாரம் செய்வது, பொதுக்கூட்டங்களை நடத்தவது, மக்கள் எவ்வாறு வாக்களிப்பது போன்றவற்றுக்கான கருத்துகளையும், ஆலோசனைகளையும் அரசியல் கட்சிகள் வரும் 31-ம் தேதிக்குள் வழங்கிட வேண்டும் எனக் கேட்கிறோம்''.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு, மக்களுக்குக் கரோனாவை பரப்பும் களமாக இருக்காது என்று தேர்தல் ஆணையம் உறுதியளிக்க வேண்டும் என்று பிஹார் மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
மேலும், வாக்குப்பதிவு மையங்களை அதிகப்படுத்தி, குறைந்த எண்ணிக்கையில் மட்டும் வாக்காளர்களை வாக்குப்பதிவு செய்ய வரிசையில் நிற்க அனுமதிக்க வேண்டும், சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT