Published : 17 Jul 2020 07:15 PM
Last Updated : 17 Jul 2020 07:15 PM
கான்பூர் போலீஸாரை சுட்டுத்தள்ள பிக்ரு கிராம சாலையை மறித்தபடி நிறுத்தப்பட்ட ஜேசிபி கனரகவாகனத்தின் ஓட்டுநர் 16 நாட்களுக்கு பின் ஆஜராகி உள்ளார். துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த போது அவர் விகாஸின் பங்களா மாடியில் அடைக்கப்பட்டிருந்தார்.
தன்னை கைதுசெய்ய வந்த கான்பூர் போலீஸாரில் 8 பேரை பிக்ரு கிராமத்தில் விகாஸ் துபே சுட்டுக் கொன்றிருந்தார். இதன் முன்னதாக அனைவரையும் தங்கள் வாகனத்தில் இருந்து இறங்கி கிராமத்தினுள் நடையாக வர திட்டமிட்டிருந்தார்.
இதற்காக அருகிலுள்ள பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஜேசிபி கனரக வாகனத்தை பிக்ரு நுழையும் சாலையில் மறித்து நிறுத்த வைத்தார் விகாஸ். இவரது மிரட்டலுக்கு அஞ்சி அந்த வாகனத்தை நிறுத்திய ஓட்டுநர் ராகுல் பால் 16 நாட்களுக்கு பின் இன்று செய்தியாளர்கள் முன் ஆஜரானார்.
அப்போது சம்பவம் குறித்து விவரித்த ராகுல் பால் கூறியதாவது:
அன்றைய பணி முடித்து ஜேசிபியில் ஓய்வாக அமர்ந்திருந்த என்னை விகாஸ் துபே அழைப்பதாக அவரது சகா என்னை பிக்ரு கூட்டி வந்தார்.
மிரட்டலுக்கு அஞ்சி நான் பிக்ரு வந்த போது அங்கு கூட்டமாகப் பலரும் கூடியிருந்தனர். எனது ஜேசிபியை பிக்ரு சாலையை மறிப்பது போல் நிறுத்த விகாஸ் உத்தரவிட்டார்.
பிறகு என்னை தனது பங்களாவின் மேல்மாடியில் சென்று அடைத்து வைத்தனர். அங்கு சுமார் 25 பேர் கைகளில் துப்பாக்கியுடன் நின்றிருந்தது பார்க்கவே அச்சமாக இருந்தது.
அடுத்த சிறிது நேரத்தில் துப்பாக்கி குண்டுகள் பாயும் பெருத்த ஓசை எழுந்தது. சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்த ஓசைக்கு இடையே பலரது அலறல் மற்றும் மிரட்டல் சத்தமும் கேட்டது.
இவ்வாறு தெரிவித்தார்.
விகாஸின் ஆட்களுக்கு அஞ்சி லக்னோவில் தம் உறவினர் வீட்டிற்கு சென்று விட்ட ராகுல் பால் இன்று கான்பூர் திரும்பி போலீஸாரிடம் தகவல் அளித்தார். இதில் சம்பவம் நடந்த அன்று துப்பாக்கி சூட்டில் இருந்தவர்களின் படங்களிலும் சிலரை அடையாளம் காட்டி உள்ளார்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின் தலைமறைவான விகாஸ் துபே கடந்த 9 ஆம் தேதி மத்தியப்பிரதேசம் உஜ்ஜைனில் சிக்கினார். இதன் மறுநாள் கான்பூர் அழைத்துச் செல்லப்பட்டவர் வழியில் உபி போலீஸாரால் என்கவுன்டர் செய்யப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT