Published : 17 Jul 2020 02:32 PM
Last Updated : 17 Jul 2020 02:32 PM
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டின் ஆட்சியைக் கவிழ்க்க மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான கஜேந்திர ஷெகாவத், அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏ பன்வார்லால் சர்மா ஆகியோர் சதி செய்துள்ளது ஆடியோ மூலம் தெரியவந்துள்ளதால் அவர்களை கைது செய்ய வேண்டும் எனக் கோரி காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா வலியுறுத்தியுள்ளார்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் தொடரந்து உரசல் இருந்து வந்தது. மாநிலங்களவைத் தேர்தல் முடிந்தபின் முதல்வர் அசோக் கெலாட் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தினார், தனது ஆட்சியை கவிழ்ப்பதற்காக சதித்திட்டம் தீட்டப்படுகிறது, குதிரை பேரத்தில் பாஜக ஈடுபட்டது என்று குற்றம்சாட்டினார். ஆனால், இதை பாஜக மறுத்தது.
இந்நிலையில், அசோக் கெலாட்டின் குற்றச்சாட்டில் அதிருப்தி அடைந்த சச்சின் பைலட் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் தனியாகச் செயல்படத்தொடங்கினார். இதனால் ஆளும் அரசு பெரும்பான்மை இழந்ததாகக் கூறப்பட்டது.
இதையடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் கூட்டப்பட்டது. அதில் சச்சின் பைலட், 2 அமைச்சர்கள் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை. ஆனால், கட்சிவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால், சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவியும், மாநில தலைவர் பதவியும் 2 அமைச்சர்களின் பதவியும் பறிக்கப்பட்டது.
இந்நிலையில் ராஜஸ்தானில் நேற்று இரவு ஒரு ஒலிநாடா வைரலானது. அதில் மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத், காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ பன்வாரிலால் சர்மா ஆகியோர் பேசுவது போன்ற உரையாடல் இருந்தது. இருவரும் சேர்ந்து காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டுவது போன்ற உரையாடல் அதில் இருந்தது.
அந்த ஒலிநாடா குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான கஜேந்திர சிங் ஷெகாவத், அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏ பன்வார்லால் சர்மா, விஸ்வேந்திர சிங், பாஜக தலைவர் சஞ்சய் ஜெயின் ஆகியோர் பேசிய 2 ஆடியோ வெளியாகியுள்ளது. இதில் தொடர்புடைய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய போலீஸாரின் சிறப்பு பிரிவு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பன்வாரிலால் சர்மா, விஸ்வேந்திர சிங் இருவரையும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து சஸ்பெஸ்ட் செய்யப்பட்டு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் ஷெகாவத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்த முயன்றால், நீதிமன்றத்தில் உரிய வாரண்ட் பெற்று கைது செய்யவேண்டும். இதேபோல மத்திய அரசின் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள், அமைப்புகளும் இந்த சதியில் ஈடுபட்டுள்ளது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
நாடு கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தபோது, அதைக் கட்டுப்படுத்தக்கூட மத்தியில் ஆளும் மோடி அரசு நடவடிக்கை எடுக்காமல் மார்ச் 24-ம் தேதிவரை மத்தியப்பிரதேசத்தில் கமல்நாத் ஆட்சியைக் கவிழ்ப்பதில்தான் ஆர்வம் காட்டியது.
தற்போது கரோனா வைரஸ் பாதிப்பு 10 லட்சத்தை எட்டியுள்ளது, சீனா நமது எல்லைப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது. ஆனால், இதைக் கவனிக்காமல் மோடி அரசு அதிகாரத்தைக் கைப்பற்றவே துடிக்கிறது.” எனக் குற்றம்சாட்டினார்
இதையடுத்து, ராஜஸ்தான் போலஸீார் இரு முதல்தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து சிறப்பு போலீஸ் ஏடிஜி அசோக் ரத்தோர் கூறுகையில் “ சமூக வலைதளங்களில் பரவிய அந்த ஆடியோ தொடர்பாக ஐபிசி 124-ஏ, 120-பி ஆகிய பிரிவுகளின் இரு முதல்தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளோம். இதில் பாஜக தலைவர் சஞ்சய் ஜெயனிடம் விசாரணை நடத்தி அவரைக் கைது செய்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT