Published : 17 Jul 2020 08:51 AM
Last Updated : 17 Jul 2020 08:51 AM
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இன்று 10 லட்சத்தைக் கடந்துள்ளது, உயிரிழப்பு 25 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் இதுவரை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரபூர்வமாக தகவல்கள் வெளியிடாத நிலையில், மாநிலங்களில் இருந்து வரும் நோய் தொற்று அடிப்படையில் பிடிஐ செய்தி நிறுவனம் கணித்துள்ளது.
அதன்படி இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்து 202 ஆக இருக்கும், உயிரிழப்பு 25 ஆயிரத்து 553 ஆக அதிகரிக்கும் என்று செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகளவில் கரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது. அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 36 லட்சத்தைக் கடந்து சென்றுள்ளது, பிரேசிலில் 20 லட்சத்தைக் கடந்துள்ளது.
தற்போது இந்தியாவில் கரோனா பாதிப்பு 10 லட்சத்தை எட்டியுள்ள நிலையில், கரோனாவுக்கு சிகிச்சை எடுத்துவருபவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 31 ஆயிரத்து 146 ஆக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி, கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கினர் சிகிச்சையில் உள்ளனர்.
கரோனா நோய்க்கு சிகிச்சைபெற்று வரும் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் 48 சதவீதம் மகாராஷ்டிரா, தமிழகத்தில் மட்டும் உள்ளனர். தமிழகம், மகாராஷ்டிரா உள்பட 10 மாநிலங்களில்தான் 84 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 8,641 பேர் புதிதாக பாதிக்பட்டுள்ளதையடுத்து, அங்கு எண்ணிக்கை 2,84,281 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று புதிதாக 4,549 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து, ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,56,369 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் 1,18,645 ஆகவும் இருக்கிறது.
கடந்த ஜனவரி 30ம் தேதி கேரளாவில் முதல் கரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார், அதன்பின் அடுத்த 5 மாதங்களில் அதாவது 170 நாட்களில் 10 லட்சத்தை எட்டியுள்ளது. இருப்பினும் ஆறுதல் அளிக்கும் விதமாக கரோனாவிலிருந்து குணமடைந்து வருவோர் சதவீதம் 63.25 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதுள்ள கரோனா எண்ணிக்கையில் 45 சதவீதம் ஜுன் மாதம் உருவாகியதும், 34.18 சதவீதம் இந்த மாதம் உருவாகியது என்பது சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.
கடந்த 24 மணிநேரத்தில் நாடுமுழுவதும் 20 ஆயிரத்து 783பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 12 ஆயிரத்து 814 ஆக அதிகரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT