Published : 16 Jul 2020 08:24 PM
Last Updated : 16 Jul 2020 08:24 PM

செப்டம்பருக்குள் இந்தியாவில் கரோனா பாதிப்பு 35 லட்சமாக அதிகரிக்க வாய்ப்பு; 2021-ல் 6 கோடிக்குமேல் அதிகரிக்கலாம்: ஐஐஎஸ்சி கணிப்பு

கோப்புப்படம்

பெங்களூரு

இந்தியாவில் கரோனா பாதிப்பு தற்போதுள்ள நிலவரத்தைவிட மோசமாகச் சென்றால் செப்டம்பர் மாதத்துக்குள் 35 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள். கர்நாடக மாநிலத்தில் 2.10 லட்சம் பேர் தொற்றுக்கு ஆளாவார்கள் என்று பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் (ஐஐஎஸ்சி) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், நாட்டில் கரோனாவுக்குச் சிகிச்சை எடுத்து வருவோர் எண்ணிக்கை 10 லட்சமாகவும், கர்நாடகத்தில் மட்டும் 71,300 பேர் சிகிச்சையில் இருப்பார்கள் என்றும் ஐஐஎஸ்சி தெரிவித்துள்ளது.

ஐஐசிஎஸ் நிறுவனத்தின் பேராசிரியர்கள் ஜி.சசிக்குமார், தீபக் ஆகியோரின் குழுவினர் தற்போது நாட்டில் மாநிலந்தோறும் கரோனா நோயாளிகள் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்தும், எதிர்காலத்தில் பரிசோதனையை அதிகப்படுத்தினால் இருக்கும் நிலை குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மாநில அரசுகள், மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஏற்ப கணிப்பு மாறுபடலாம் என்றும் தெரிவித்துள்ளனர். வாரத்துக்கு 2 அல்லது 3 நாட்கள் லாக்டவுன் கொண்டுவருதல், அந்த நாட்களில் முழுமையாக மக்களை வெளியேவரவிடாமல் தடுத்தல் மூலம் கரோனா சங்கிலியை உடைக்க முடியும் எனவும் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

தேசிய அளவில் உள்ள நிலவரம், மாநில அரசுகளின் கரோனா தடுப்பு நடவடிக்கை ஆகியவற்றை அளவீடுகளாக வைத்துக் கணிக்கப்பட்டுள்ளது. இதில் கேரளா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நிலவரம் தேசிய நிலவரத்தைவிட சூழல் சிறப்பாக இருக்கிறது. ஆனால், மகாரஷ்டிரா, தமிழகம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தேசிய நிலவரத்தைவிட சூழல் மோசமாக இருக்கிறது.

இந்தியாவில் இன்றைய நிலவரப்படி ஒட்டுமொத்தமாக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 68 ஆயிரத்து 876 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 12 ஆயிரத்து 814 ஆக உயர்ந்து, குணமடைந்தோர் சதவீதம் 63.23 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 146 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளையோ அல்லது நாளை மறுநாளோ இந்தியாவில் கரோனா பாதிப்பு 10 லட்சத்தை எட்டிவிடும்.

இப்போது தொடரும் இந்த நிலையைவிட முன்னேற்றமான சூழல் இருந்தால், வரும் செப்டம்பர் மாதத்துக்குள் இந்தியாவில் 20 லட்சம் பேர் கரோனாவில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. 4.5 லட்சம் பேர் சிகிச்சையில் இருப்பார்கள். 88 ஆயிரம் பேர் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது.

அதேபோல கர்நாடகாவில் இப்போதுள்ள நிலையில் முன்னேற்றம் இருந்தால், செப்டம்பர் மாதத்துக்குள் 1.20 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள், 28,700 பேர் சிகிச்சையில் இருப்பார்கள்.

இதேநிலை 2021-ம் ஆண்டு மார்ச் வரை தொடர்ந்தால் நாட்டில் 37.40 லட்சம் பேர் கரோனாவில் பாதிக்கப்படுவார்கள், அதில் 14 லட்சம் பேர் சிகிச்சையில் இருப்பார்கள். 1.90 லட்சம் பேர் கரோனா வைரஸால் உயிரிழக்கவும் வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது கரோனா பாதிப்பு இருக்கும் நிலையைவிட மோசமாக மாறினால், அதாவது நாளுக்குநாள் பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில், வரும் செப்டம்பர் மாதத்துக்குள் மகாராஷ்டிரவில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 6.30 லட்சமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. டெல்லியில் 2.40 லட்சமாகவும், தமிழகத்தில் 1.60 லட்சமாகவும், குஜராத்தில் 1.80 லட்சமாகவும் கரோனா நோயாளிகள் அதிகரிக்கலாம்.

உயிரிழப்பைப் பொறுத்தவரை செப்டம்பர் மாதத்துக்குள் 1.40 லட்சமாக அதிகரிக்கலாம். இதில் மகாராஷ்டிராவில் மட்டும் 25 ஆயிரம் பேர் கரோனாவால் உயிரிழக்க நேரிடும். டெல்லியில் 9,700 பேரும், கர்நாடகாவில் 8,500 பேரும், தமிழகத்தில் 6.300 பேரும், குஜராத்தில் 7,300 பேரும் உயிரிழக்க நேரிடலாம்.

இப்போதுள்ள நிலையைவிட மோசமான சூழல் தொடர்ந்தால் 2020-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதிக்குள் இந்தியாவில் 1.20 கோடி பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்படலாம், அதில் 5 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும். 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்குள் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 2.90 கோடியாக அதிகரிக்கும், 10 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும்.

நவம்பர் 1-ம் தேதிக்குள் கர்நாடகாவில் கரோனா பாதிப்பு 7.20 லட்சமாக அதிகரிக்கும், 30,400 பேர் உயிரிழக்க நேரிடும். 2021-ம் ஆண்டு ஜனவரிக்குள் 10.80 லட்சம் பேர் பாதிக்கப்படலாம், அதில் 78,900 பேர் உயிரிழக்க நேரிடும் எனத் தெரிவித்துள்ளது.

மோசமான சூழல் தொடர்ந்தால் 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் கரோனாவில் 6.20 கோடி பேர் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. இதில் 82 லட்சம் பேர் சிகிச்சையில் இருப்பார்கள், 28 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x