Published : 16 Jul 2020 04:24 PM
Last Updated : 16 Jul 2020 04:24 PM
கரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்தால் கடவுளால் மட்டும்தான் கர்நாடக மாநிலத்தை காப்பாற்ற முடியும் என்று கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பி.ஸ்ரீராமுலு பேசியது சர்ச்சையாகியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கரோனா பரவல் தீவிரமடைந்து, உயிரிழப்பும் அதிகரி்த்து வருகிறது. இதனால் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு நடைமுறைக்கு வந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் இதுவரை 47 ஆயிரத்துக்கு அதிகமானோர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர், 900க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
ஆளும் பாஜக அரசை கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை முறையாகச் செய்யவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர், அமைச்சர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பதால் தடுப்பு நடவடிக்கை முறையாகச் செய்யப்படவில்லை என்று குற்றம்சாட்டினர்.
காங்கிரஸ் கட்சியி்ன் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து சித்தரதுர்கா நகரில் நேற்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பி.ஸ்ரீராமுலு நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில் “ கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவது யார் கையில் இருக்கிறது. கடவுள்தான் நம்மையும், மாநிலத்தையும் காப்பாற்ற முடியும். மக்களுக்குதான் முழுமையான விழிப்புணர்வு வர வேண்டும்.
இந்த சூழலில் மாநில அரசின் தடுப்பு பணிகளை விமர்சிப்பதை காங்கிரஸார் குறைத்துக்கொள்ள வேண்டும். அடுத்த இரு மாதங்களில் நிலைமை இன்னமும் மோசமாகக்கூடும். கரோனா வைரஸுக்கு ஏழை , பணக்காரர், எதிர்்க்கட்சி, ஆளும்கட்சி என்றெல்லாம் தெரியாது ” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தை கடவுளால்மட்டும்தான் காப்பாற்ற முடியும் என்று அமைச்சர் ஸ்ரீராமுலு பேசியது மாநிலத்தில் பெரும் சர்ச்சையானது. காங்கிரஸ் கட்சியினர் அமைச்சரின் இந்த பேச்சை கடுமையாகக் கண்டித்து, விமர்சிக்கத் தொடங்கினர்.
காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ மாநில சுகாதாரத்துறை அமைச்சர் , கர்நாடக மாநிலத்தை கடவுள்மட்டும்தான் காப்பாற்ற முடியும் என்று கூறுவது எடியூரப்பா அரசின் மோசமான நிர்வாகத்தையும், கரோனா வைரஸ் சிக்கலை கையாளமுடியவில்லை என்பதையும் காட்டுகிறது. கரோனா வைரஸைக் கையாளத் தெரியாத இதுபோன்ற உதவாத அரசுஎதற்காக நமக்குத் தேவை. இந்த அரசின் கையாளாகத்தனத்தால் மக்களை கடவுள் கருணையிடம் ஒப்படைத்துள்ளது” என விமர்சித்தார்.
இதையடுத்து, தனது பேச்சுக்கு வீடியோ மூலம் அமைச்சர் ஸ்ரீராமுலு விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவில் கூறுகையில் “ மக்கள் ஒத்துழைப்பு, விழிப்புணர்வு இருந்தால்தான் கரானோவை கட்டுப்படுத்த முடியும். உலகத்தையே கடவுள்தான் காக்கிறார் என்ற கோணத்தில் கடவுள்தான் நம்மைக் காக்க வேண்டும் என்று கூறினேன்.
ஆனால், இதை ஊடகங்கள் தவறாக கூறிவிட்டன. என்னுடைய கருத்தின் அர்த்தம் என்பது கரோனாவுக்கு தடுப்பு மருந்து வரும்வரை, நம்மை கடவுள்தான் காக்க முடியும். இதை தவறாக அர்த்தம் கொள்ளக்கூடாது” எனத் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT