Published : 16 Jul 2020 03:43 PM
Last Updated : 16 Jul 2020 03:43 PM

கரோனா தடுப்பு மருந்து சைகோவி-டி; வெற்றிகரமாக சோதனை: உயிரியல் தொழில்நுட்பத் துறை தகவல்

புதுடெல்லி

மத்திய அரசின் உயிரியல் தொழில்நுட்பத் துறையின் ஆதரவுடன் கண்டுபிடிக்கப்பட்ட சோதனை வெற்றிகரமாக நடந்து வருவதாக பிஐஆர்ஏசி தலைவர்டாக்டர் ரேணு ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் உயிரியல் தொழில்நுட்பத் துறையின் ஆதரவுடன் கண்டுபிடிக்கப்பட்ட சைகோவி-டி (ZyCoV-D) எனப்படும் கோவிட் 19 நோய்க்கான தடுப்பு மருந்து, மருத்துவப் பரிசோதனை முதலாம்/இரண்டாம் கட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது

உயிரி தொழில் நுட்ப தொழில் ஆராய்ச்சி உதவிக் குழுவினால் (பி ஐ ஆர் ஏ சி) நடைமுறைப்படுத்தப்படும் தேசிய உயிரி மருந்தாளுமை திட்டத்தின் கீழ் மத்திய அரசின் உயிரியல் தொழில்நுட்பத் துறையின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும் தடுப்பு மருந்து கண்டுபிடிப்புத் திட்டம், மருத்துவப் பரிசோதனை கட்டத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

சைகோவி-டி (ZyCoV-D) எனப்படும் இந்த பிளாஸ்மிட் டிஎன்ஏ தடுப்பு மருந்து சைடஸ் என்ற நிறுவனத்தால் வடிவமைத்து, தயாரிக்கப்பட்டது. மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறை இதற்கான பகுதி நிதி உதவி அளித்துள்ளது. இந்தத் தடுப்பு மருந்து ஆரோக்கியமான மனிதர்களுக்குச் செலுத்தப்பட்டு மருத்துவப் பரிசோதனைகளின் முதலாவது, இரண்டாவது கட்டப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று பி ஐ ஆர் ஏ சி அறிவித்துள்ளது. இந்தியாவில் மனிதர்களுக்குச் செலுத்தப்படவுள்ள, கோவிட் 19 நோய்க்கான உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதலாவது தடுப்பு மருந்து இது என்றும் பி ஐ ஆர் ஏ சி அறிவித்துள்ளது.

தடுப்பு மருந்து கொடுக்கப்படும் அளவை அதிகரிப்பது; பலமுனை ஆய்வுகளை மேற்கொள்வது; போன்றவற்றை உள்ளடக்கிய முதலாவது, இரண்டாவது கட்டப் பரிசோதனை மூலம் இந்த தடுப்பு மருந்தின் பாதுகாப்பு; இது செலுத்தப்பட்டவர்களுக்கு இதை தாங்குகின்ற தன்மை; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை ஆகியவை குறித்து மதிப்பிடப்படும். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கோவிட் 19 நோய்க்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் விரைவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது மனிதர்கள் மீது

மேற்கொள்ளப்படவுள்ள தடுப்பு மருந்து பரிசோதனை, இந்தத் திட்டத்தின் கீழ் முக்கியமான மைல்கல் ஆகும்.மத்திய உயிரி தொழில்நுட்பத் துறையின் செயலரும் பி ஐ ஆர் ஏ சி அமைப்பின் தலைவருமான டாக்டர் ரேணு ஸ்வரூப், “தேசிய உயிரி மருந்தாளுமை இயக்கத்தின் கீழ் கோவிட் நோய்க்கான தடுப்பு மருந்தை உள்நாட்டிலேயே விரைந்து தயாரிப்பது என்பதற்காக, மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறை சைடஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது.

பல கோடிக்கணக்கான மக்களை அபாயகரமான சூழலில் வைத்துள்ள இந்தப் பயங்கரமான பெருந்தொற்றுக்கு எதிராகப் போராடுவதற்காக தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு சைடஸ் நிறுவனத்துடன் கூட்டு முயற்சி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது போன்ற ஆராய்ச்சி முயற்சிகள் தற்போதைய தொற்றுக்கும், எதிர்காலத்தில் இதுபோன்ற தொற்று வர நேரிட்டால், அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறியவும், நாட்டிற்கு உதவும். சமுதாயத்திற்கு மிகவும் தேவையான அளவிடக்கூடிய, உண்மையான மாற்றங்களைக் கொண்டுவரும் வகையிலான புதிய பொருட்களைக் கண்டறியும் புதுமைகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலான சுற்றுச்சூழலை உருவாக்க வேண்டும் என்ற அரசின் எண்ணத்திற்கு எடுத்துக்காட்டாகவும் இது அமைகிறது” என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x