Published : 16 Jul 2020 02:06 PM
Last Updated : 16 Jul 2020 02:06 PM

ஐ.நா. பொருளாதார சமூக கவுன்சில் கூட்டம்: பிரதமர் மோடி நாளை உரை

கோப்புப் படம்

புதுடெல்லி

ஐ.நா. சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் உயர்மட்ட குழு கூட்டத்தில் நாளை பிரதமர் உரையாற்றுகிறார்.

ஐ.நா. சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் இந்த ஆண்டிற்கான உயர்மட்டக் குழு 2020 ஜூலை 17 அன்று காலை 09.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலமாக சிறப்புரை ஆற்றவிருக்கிறார். இந்த உயர்மட்டக் குழு கூட்டத்தின் இறுதி நிகழ்ச்சியில் நார்வே பிரதமர் மற்றும் ஐ.நா. சபை பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டெரெஸ் ஆகியோருடன் இணைந்து பிரதமர் உரையாற்றவுள்ளார்.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த உயர்மட்டக் குழு கூட்டத்தில் அரசு, தனியார் துறை, பொதுச்சமூகம் மற்றும் கல்வியாளர்களின் பிரதிநிதிகள் என சமூகத்தின் பல்வேறு மட்டங்களையும் சேர்ந்தவர்கள் கலந்து கொள்கின்றனர். “கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு பன்முகத் தன்மை: 75வது ஆண்டில் எத்தகைய ஐ.நா. சபை நமக்குத் தேவைப்படுகிறது” என்பதே இந்த ஆண்டிற்கான உயர்மட்டக் குழு கூட்டத்தின் பேசுபொருள் ஆகும்.

மாறி வரும் சர்வதேசச் சூழல் மற்றும் கொரோனா பெருந்தொற்று ஆகியவற்றின் பின்னணியில் நடைபெறும் இக்கூட்டம் பன்முகத் தன்மையினை வளர்த்தெடுக்கும் முக்கியமான சக்திகள் குறித்து கவனம் செலுத்துவதாகவும், வலுவான தலைமை, சிறப்பாகச் செயல்படும் சர்வதேச அமைப்புகள், விரிவடைந்த பங்கேற்பு மற்றும் உலகளாவிய மக்கள் நலனின் அதிகரித்து வரும் முக்கியத்துவம் ஆகியவற்றுக்கான வழிகளைக் கண்டறிவதாகவும் இருக்கும்.

ஐ.நா. வின் பாதுகாப்புக் கவுன்சிலில் 2021-22 காலப்பகுதிக்கென நிரந்தரமற்ற உறுப்பினராக பெருவாரியான ஆதரவுடன் ஜூன்17 அன்று இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஐ.நா. சபையின் பெருவாரியான உறுப்பினர்களிடையே பிரதமர் உரை நிகழ்த்துவதற்கான முதல் வாய்ப்பு இதுவே ஆகும். ஐ.நா. சபை உருவாக்கப்பட்டு 75ஆண்டுகள் நிறைவு செய்யும் தருணத்தில் அதன் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் உயர்மட்டக் குழு கூட்டத்தின் பேசுபொருளும் கூட பாதுகாப்புக் கவுன்சிலின் முன்னுரிமை குறித்த இந்தியாவின் கருத்தோட்டத்தை எதிரொலிப்பதாகவே அமைந்துள்ளது.

கரோனாவிற்குப் பிந்தைய காலத்தில் திருத்தி அமைக்கப்பட்ட பன்முகத்தன்மை தேவைப்படுகிறது என்றே நாம் கூறியிருந்தோம். ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் தொடக்க நிகழ்வின் தலைமைப் பொறுப்பை வகித்த நாடு என்ற வகையில் (1946ஆம் ஆண்டில் சர். ராமசாமி முதலியார் (இந்தியாவின் சார்பாக அக்கூட்டத்திற்குத் தலைமை வகித்திருந்தார்) இந்தியாவின் பங்கினையும் இது நினைவுபடுத்துகிறது. 2016ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற ஐ.நா.சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் 70வது ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் முக்கிய பேச்சாளராக காணொலி மூலம் உரை நிகழ்த்தினார் என்பதும் இங்கு நினைவு கூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x