Published : 16 Jul 2020 09:47 AM
Last Updated : 16 Jul 2020 09:47 AM
உலக தொழில் திறன் தினத்தை முன்னிட்டு திறன் வளர்த்தல், பொருட்களின் மதிப்புக் கூட்டுதலில் கைவினைத்திறனின் பங்கு ஆகியவை பற்றி பேசிய பிரதமர் மோடி தான் தன்னார்வலராக இருந்த காலத்தில் நடந்த நிகழ்வு ஒன்றை தொழில்திறன் சக்திக்கு ஓர் உதாரணமாகக் குறிப்பிட்டார்.
அந்த நிகழ்வு பற்றி பிரதமர் குறிப்பிட்டதாவது:
தொழில்திறன்களின் சக்தியை ஒவ்வொருவரும் அனுபவித்திருக்க வேண்டும். இன்றைக்கு, நான் உங்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, ஒரு சம்பவம் எனக்கு நினைவுக்கு வருகிறது. என்னுடைய இளவயதில் மலைவாழ் பகுதியில் தன்னார்வலராக நான் வேலை பார்த்து வந்த காலம் அது.
சில நிறுவனங்களுடன் இணைந்து நான் செயல்பட்டுக் கொண்டிருந்தேன். ஒருமுறை, ஓர் அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் நாங்கள் ஜீப்பில் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் காலையில் ஜீப் ஸ்டார்ட் ஆகவில்லை. எல்லோரும் நிறைய முயற்சி செய்து பார்த்தோம். தள்ளிவிட்டுப் பார்த்தார்கள்.
ஆனால் ஜீப் ஸ்டார்ட் ஆகவில்லை. காலை 7 அல்லது 8 மணிக்கு ஒரு மெக்கானிக்கை அழைத்தார்கள். அவர் வந்து 2 நிமிடங்களில் அதைச் சரி செய்துவிட்டார். எவ்வளவு கட்டணம் என்று கேட்டோம்; 20 ரூபாய் என்றார். அந்தக் காலத்தில் 20 ரூபாயின் மதிப்பு அதிகம். ஆனால் எங்களிடம் இருந்த ஒருவர் கூறினார், ``சகோதரரே இது வெறும் 2 நிமிட வேலை, நீங்கள் 20 ரூபாய் கேட்கிறீர்களே'' என்றார். அதற்கு அவர் அளித்த பதில் எனக்கு இன்றைக்கும் உத்வேகம் அளிப்பதாக இருக்கிறது. என மனதில் ஒரு தாக்கத்தை அது ஏற்படுத்திவிட்டது.
கல்வி கற்காத அந்த மெக்கானிக், ``சார் நான் 2 நிமிடங்களுக்காக 20 ரூபாய் கேட்கவில்லை, 20 வருடங்களாக நான் சேர்த்து வைத்திருக்கும் திறனுக்காகக் கேட்கிறேன். இத்தனை ஆண்டுகளாக நான் சேர்த்து வைத்திருக்கும் அனுபவங்களுக்கு தான் 20 ரூபாய் கேட்கிறேன்'' என்று பதில் அளித்தார். இதுதான் தொழில் திறனின் பலம் என்று நான் நம்புகிறேன். உங்களுடைய வேலையில் மட்டுமின்றி, உங்கள் திறமையிலும் அது தாக்கத்தையும் செல்வாக்கையும் ஏற்படுத்துகிறது.
இவ்வாறு கூறினார் பிரதமர் மோடி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT