Last Updated : 16 Jul, 2020 09:06 AM

 

Published : 16 Jul 2020 09:06 AM
Last Updated : 16 Jul 2020 09:06 AM

பிணையத்தொகை ரூ.30 லட்சத்தை பெற்றுக் கொண்டு கடத்தப்பட்டவரை ஒப்படைக்காமல் தப்பிய கும்பல்

புதுடெல்லி

ரவுடி விகாஸ் துபேவின் துப்பாகிச் சூடு சம்பவத்தை அடுத்துஆள் கடத்தல் வழக்கு உத்தரபிரதேசத்தை அதிர வைத்துள்ளது. கான்பூரில் ஆள்கடத்தல் கும்பல் ஒன்று ரூ.30 லட்சத்தை பெற்ற பின்பும் கடத்தப்பட்டவரை ஒப்படைக்காமல் தப்பியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் 8 போலீஸாரை சுட்டுக்கொன்ற ரவுடி விகாஸ் துபே கடந்த சில தினங்களுக்கு முன்பு என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். முன்னதாக அவரது 5 சகாக்களும் கான்பூர் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து மாநிலத்தில் உள்ள மற்ற ரவுடிகள் மீதான தேடுதல் வேட்டை தீவிரமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆள்கடத்தல் கும்பல்ஒன்று கான்பூரில் கைவரிசை காட்டியுள்ளது.

கான்பூரின் பாரா காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த ஜமன்லால் சிங்கின் மகன் சஞ்சீத்யாதவ். மருத்துவப் பரிசோதனையகத்தில் பணியாற்றும் இவர், கடந்த மாதம் 22-ம் தேதி தனது இருசக்கர வாகனத்துடன் மாயமானார். இதுதொடர்பாக பாரா காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டிருந்தது.

ஒரு வாரத்துக்குப் பிறகு சஞ்சீத்தை கடத்தி உள்ளதாக அவரது குடும்பத்தினருக்கு மர்மநபர் தொலைபேசி மூலம் தகவல்தெரிவித்துள்ளார். இதை போலீஸாரிடம் கூறியும் அவர்களால் அந்த எண்ணில் இருந்து பேசியவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், அதே எண்ணில் மீண்டும் பேசிய கும்பல் சஞ்சீத்தை விடுவிக்க ரூ.30 லட்சம் கேட்டுள்ளனர். இதுகுறித்து சஞ்சீத் குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து பணத்தை கொடுப்பது போன்று சஞ்சீத்தை மீட்பதுடன் கடத்தல் கும்பலையும் பிடிப்பது என பாரா காவல் நிலையத்தினர் திட்டமிட்டதாக தெரிகிறது. இதை சஞ்சீத்தின் குடும்பத்தினரிடம் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக சஞ்சீத்தின் தந்தை ஜமன்லால் தனது வீட்டை ரூ.20 லட்சத்துக்கும், மகளின் திருமணத்துக்காக வைத்திருந்த நகைகளை ரூ.10 லட்சத்துக்கும் விற்று பணத்தை ஏற்பாடு செய்துள்ளார். இதையடுத்து கடத்தல் கும்பல்அளித்த தகவலின்படி கான்பூரிலிருந்து ஏட்டா செல்லும் நெடுஞ்சாலையில் ஜமன்லால் கடந்த திங்கள்கிழமை பணத்துடன் சென்றுள்ளார்.

அப்போது ஜமன்லாலை தொடர்புகொண்ட கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் குஜ்ஜைனி ரயில் பாலத்தின் அடியில் பணப்பையை வைத்தால் சஞ்சீத் அனுப்பிவைக்கப்படுவார் என தெரிவித்துள்ளனர். இதன்படி பாலத்தின் அடியில் பணப்பையை ஜமன்லால் வைத்தார். ஆனால் கடத்தல் கும்பலோ வாக்களித்தபடி சஞ்சீத்தை திருப்பி அனுப்பவில்லை.

இதற்கிடையே பணத்தைக் கொண்டு சென்றபோது ஜமன்லாலை கான்பூர் போலீஸார் சாதாரண உடைகளில் ரகசியமாக பின் தொடர்ந்துள்ளனர். ஆனால் இவர்கள் கண் முன்னே கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் பணத்துடன் தப்பிவிட்டனர்.

இதுகுறித்து ஜமன்லால் கூறும்போது, "இப்பிரச்சனையில் நாங்கள் கான்பூர் போலீஸாரால் ஏமாற்றப்பட்டு விட்டோம். கடத்தல்காரர்களை பிடிப்பதற்காக முன்கூட்டியே போதுமான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. பணப்பையில் செல்போனை மறைத்து வைத்து தொழில்நுட்ப வசதியுடன் பின்தொடரலாம் எனக் கூறப்பட்ட யோசனையும் ஏற்கப்படவில்லை" என்றார்.

ஜமன்லாலின் புகாரை மறுக்கும் கான்பூர் எஸ்எஸ்பி பி.தினேஷ் குமார், நேற்று மாலை சஞ்சீத் வீட்டிற்கு நேரில் சென்றிருந்தார். அப்போது அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன் விரைவில் சஞ்சீத்துடன் பணத்தையும் மீட்டு கடத்தல் கும்பலை கைது செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

ஏற்கெனவே ரவுடி விகாஸின் துப்பாக்கிச் சூடு வழக்கை சமாளித்து வரும் கான்பூர் போலீஸாருக்கு இப்போது சஞ்சீத்தை மீட்பதும் பெரும் சவாலாகி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x