Published : 15 Jul 2020 04:30 PM
Last Updated : 15 Jul 2020 04:30 PM
உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிராமம் ஒன்றின் விவசாயி மகன் அனுராக் திவாரி 12-ம் வகுப்பு தேர்வில் 98.2% எடுத்து தேர்ச்சி பெற்றதையடுத்து அமெரிக்காவின் ஐவி லீக் பல்கலைக்கழகங்களில் ஒன்றான கார்னெல் பல்கலைக் கழகத்தில் 100% ஸ்காலர்ஷிப் உதவியுடன் மேற்படிப்புக்குச் செல்கிறார்.
அனுராக் திவாரி என்ற இந்த மாணவர் லக்மிபூர் மாவட்டத்தில் உள்ள சராசன் கிராமத்தைச் சேர்ந்தவர். கார்னெல் பல்கலைக் கழகத்தில் இவருக்கு மேல்படிப்புக்கான இடம் கிடைத்தது. அவர் பொருளாதாரத்தில் பட்டப்படிப்பு படிக்கவிருக்கிறார்.
ஹியுமானிட்டீஸ் எனும் மானுடவியல் சார்ந்த படிப்பு மாணவரான 18 வயதான அனுராக் திவாரி, கணிதத்தில் 95 மதிப்பெண்களும், ஆங்கிலந்தில் 97, அரசியல் விஞ்ஞான படிப்பில் 99, பொருளாதாரம் மற்றும் வரலாற்றுப் பாடங்களில் முறையே 100 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளர்.
இதோடு மட்டுமல்லாமல் அமெரிக்காவில் கல்லூரிகளில் மேற்படிப்புக்காக நடத்தப்படும் ஸ்கொலாஸ்டிக் அசெஸ்மெண்ட் தேர்வு என்ற மதிபீட்டுத் தேர்வில் 1,370 மதிப்பெண்கள் எடுத்து தனது கார்னெல் பல்கலைக் கழக மேற்படிப்புக் கனவை பூர்த்தி செய்துள்ளார். டிசம்பர் 2019-ல் கார்னெல் பல்கலைக்கழகத்தின் இந்த மதிப்பாய்வு தேர்வை எழுதினார் அனுராக் திவாரி
டிசம்பரில் கார்னெல் பலகலைக் கழகம் இவரை மேற்படிப்புக்காக தேர்வு செய்ததை தெரிவிக்கும் கடிதத்தில், ‘வாழ்த்துக்கள்! கார்னெல் பலகலைக் கழகம் மேற்படிப்புக்காக உங்களை அனுமதிக்கிறது. இந்த ஆச்சரியகரமான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதிலும் கார்னெல் பல்கலைக் கழகத்துக்கு உங்களை வரவேற்பதின் மூலமும் கவுரவிக்கப்படுகிறேன்’ என்று அனுராக் திவாரிக்கு ஆர்.பர்டிக் என்ற என்ரோல்மெண்ட் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கார்னெல் பல்கலைக் கழகம் இவரது மேற்படிப்புக்கான அனைத்திற்கும் முழு உதவி புரிகிறது. அதாவது முழு ஸ்காலர்ஷிப்புடன் இவர் தன் மேற்படிப்படி முடிக்கலாம்.
ஆனால் இந்தப் பயணம் மாணவருக்கு அவ்வளவு எளிதாக அமையவில்லை. சீதாபூர் மாவட்டத்தில் உள்ள தங்கிப்படிக்கும் பள்ளிக்குச் செல்ல வேண்டியிருந்தது. காரணம் குடும்பம் ஏழ்மையானது, இவரது பெற்றோர் கமல்பதி திவாரி, சங்கீதா திவாரி ஆகியோருடன் 3 அக்காவும் இவருக்கு உள்ளனர். ஒரு அக்காவுக்கு திருமணம் முடிந்துள்ளது, எனவே பணக்கஷ்டம் அதிகம் என்கிறார் சாதனை மாணவர் அனுராக் திவாரி.
“என் பெற்றோர் முதலில் என்னை சீதாபூர் பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டினர். தந்தை விவசாயி, தாய் வீட்டிலிருப்பவர். நான் படிப்பிற்குச் சென்று விட்டால், நான் விவசாயத்திற்குத் திரும்ப மாட்டேன் என்று அவர்கள் கருதினர். ஆனால் என் சகோதரிகள் பெற்றோரை சமாதானம் செய்து என்னை பள்ளிக்கு அனுப்பினர். ” என்றார். சீதாபூரில் சிவ்நாடார் அறக்கட்டளை நடத்தும் வித்யக்யான் லீடர்ஷிப் அகாடமியில் படித்தார் அனுராக் திவாரி.
சரளமாக ஆங்கிலத்தில் பேசும் அனுராக் திவாரி, ‘இப்போது என் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி, என்னை நினைத்துப் பெருமைப் படுகின்றனர்.’ என்ரார்.
கிராமத்தில் ஆங்கிலத்தின் வாடையே இல்லாமல் எப்படி இப்படி சரளமான ஆங்கிலம் என்று கேட்டதற்கு, 6ம் வகுப்புக்குப் பிறகு இந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்த பிறகுதான் என்கிறார்.
“முதல் 2 ஆண்டுகளுக்கு எனக்கு ஆங்கிலம் வரவில்லை. ஆனால் கடுமையாக முயற்சித்தேன். முதலில் பிறர் பேசுவதை புரிந்து கொள்ளத் தொடங்கினேன். இப்போதுதான் சரளமாக நான் பேசுகிறேன், ஆனாலும் இன்னும் முன்னேற்றம் தேவை.
லிபரல் ஆர்ட்ஸ் மற்றும் மானிடவியல் சார்ந்த துறை தனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்ற அனுராக் திவாரி, மானுடம் சார்ந்த துறையை 10வதுக்குப் பிறகு தேர்வு செய்ததில் பலருக்கும் அதிருப்தி என்றார். அனைவரும் அறிவியல், வணிகம் எடுத்துப் படிக்கச் சொன்னார்கள், ஆனால் நான் இதைத்தான் படிப்பேன் என்றேன் என்கிறார் திவாரி.
ஆனால் டெல்லியில் என் ஆசிரியர்கள் நான் ஐவி லீக் கல்லூரிகளில் முயற்சி செய்யலாம் என்று ஆலோசனை வழங்கினர். குறிப்பாக லிபரல் ஆர்ட்ஸ் துறை வேண்டுமென்றால் ஐவி லீக் கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டும் என்று அவர்கள் ஆலோசனை வழங்கினர்.
அதனால் தான் கார்னெல் பல்கலைக் கழகத்துக்கு விண்ணப்பித்தேன். கார்னெல் பல்கலைக் கழக படிப்புக்காக நான் ஆகஸ்டில் அமெரிக்கா செல்ல வேண்டும், ஆனால் இப்போது கட்டுப்பாடுகள் இருப்பதால் ஆன் லைன் வகுப்புகள்தான், பிப்ரவரி 2021-ல் அங்கு செல்வேன்.
மேஜர் படிப்பாக பொருளாதாரத்தையும் அதன் துணை படிப்பாக கணிதத்தையும் படிக்க எண்ணியுள்ளேன். முதுகலையையும் அங்கேயே பயின்று டேட்டா அனாலிசிஸ் துறையில் முதுகலைப் பட்டம் பெறலாம் என்பதே என் எண்ணம்.
ஆனால் என் கல்வியை முடித்து விட்டு பணி அனுபவம் பெற்ற பிறகு இந்தியாவுக்குத் திரும்பவே விரும்புகிறேன். இங்கேயே பணியாற்றி நாட்டின் கல்வித்துறைக்கு பங்களிப்பு செய்யலாம் என்பதே என் முடிவு” என்று கூறுகிறார் சாதனை மாணவர் அனுராக் திவாரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT