Published : 15 Jul 2020 02:57 PM
Last Updated : 15 Jul 2020 02:57 PM
மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை குறித்து கடுமையாக விமர்சித்துள்ள ராகுல் காந்தி, அனைத்து இடங்களிலும் இந்தியா மரியாதையை, அதிகாரத்தை இழந்து வருகிறது. இதனால் மத்திய அரசு என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறது என்று விமர்சித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு சரக்குகளை சாலை மார்க்கமாகக் கொண்டு செல்ல பாகிஸ்தான் வழியாகவே இந்தியா செல்ல வேண்டும். ஆனால், அதற்கு பாகிஸ்தான் அனுமதி மறுத்ததால், கடல் வழியாக ஈரான் சென்று அங்கிருந்து ஆப்கனுக்கு சரக்குகளை ரயில் மூலம் அனுப்ப இந்தியா திட்டமிட்டது. இதற்காக ஈரானின் சாபஹர் துறைமுகத்தை முழுமையாகச் சீரமைக்கும் பணியைச் செய்ய ஈரானிடம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இந்தியா ஒப்பந்தம் செய்தது.
சாபஹார் துறைமுகத்திலிருந்து ஆப்கன் எல்லை சஹேதான் வரை ரயில் பாதை அமைக்கும் ஒப்பந்தத்தை இந்தியாவுடன் ஈரான் மேற்கொண்டது. ஆனால், ஈரானுடன் இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்திய ரூபாய் மதிப்பில் செய்து வந்தபோது, அமெரிக்கா விதித்த தடையால் ஈரானுடன் செய்து வந்த கச்சா எண்ணெய் வர்த்தகத்தை இந்தியா நிறுத்தியது.
இந்தச் சூழலில் திட்டத்தைத் தொடங்க இந்தியத் தரப்பிலிருந்து நிதி அளிப்பதில் தாமதமாகி வருவதால் தாங்களே இந்தத் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்கிறோம் என்று ஈரான் இந்தியாவை இத்திட்டத்திலிருந்து நீக்கியுள்ளது. இந்தியா மிகுந்த ஆர்வமாக இந்தத் திட்டத்தில் ஈடுபடவில்லை, போதுமான நிதியையும் அளிக்கவில்லை என்பதால், ஈரான் நாடே சொந்தமாக நிதியுதவி அளித்து திட்டத்தை நிறைவேற்றும் எனத் தெரிவித்துள்ளது.
மேலும், சீனாவுடன் 25 ஆண்டுகால 400 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தை ஈரான் இறுதி செய்ததும் இந்தியாவை நீக்கியதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்தியாவுடன் எல்லை விவகாரத்தில் பிரச்சினை செய்துவரும் சீனா, தற்போது இந்தியா வர்த்தகம் ஒப்பந்தம் செய்துள்ள நாடுகளிலும் தனது முதலீட்டின் வளத்தைக் காண்பித்து, முதலீடு செய்து ஒப்பந்தத்தை ரத்து செய்து வருகிறது.
சாபஹர் துறைமுகத்திலிருந்து ரயில் பாதை அமைக்கும் திட்டத்திலிருந்து இந்தியா நீக்கப்பட்டுள்ள செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பதிவிட்டு மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
அதில், “இந்தியாவின் சர்வதேச வியூகங்கள் அனைத்தும் துண்டு துண்டாகி வருகிறது. அனைத்து இடங்களிலும் இந்தியா தனது மதிப்பையும், அதிகாரத்தையும் இழந்து வருகிறது. மத்திய அரசுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT