Last Updated : 15 Jul, 2020 02:25 PM

5  

Published : 15 Jul 2020 02:25 PM
Last Updated : 15 Jul 2020 02:25 PM

ஒரு குடும்பத்தின் கைகளில் அதிகாரத்தை அளித்து காங்கிரஸ் சிக்கித் தவிக்கிறது: சச்சின் பைலட் நீக்கம் குறித்து அரசியல் வல்லுநர்கள் கருத்து

கோப்புப் படம்.

புதுடெல்லி

காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பத்தின் கைகளில் அதிகாரத்தை அளித்து சிக்கித் தவிக்கிறது. ஜோதிர் ஆதித்யா சிந்தியா, அடுத்ததாக சச்சின் பைலட் வெளியேற்றம் போன்றவை காங்கிரஸ் கட்சிக்குள் சிக்கல் ஆழமாக இருப்பதையும், தெளிவான செயல்திட்டம் இல்லாததையுமே காட்டுகிறது என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வரும், மாநில காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டிய நிலையில் சச்சின் பைலட் தனியாக ஒரு அணியாகச் செயல்படத் தொடங்கியதால் ஆளும் அரசுக்குச் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து, எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு வருமாறு காங்கிரஸ் கட்சியின் கொறடா உத்தரவிட்டிருந்தார். ஆனால், அதில் சச்சின் பைலட், ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் வரவில்லை. ஆட்சியைக் கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியதற்காக சச்சின் பைலட்டை மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கியும், துணை முதல்வர் பதவியைப் பறித்தும் காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுத்தது. அதேபோல, அமைச்சர்களாக இருந்த விஸ்வேந்திர சிங், ரமேஷ் மீனா ஆகியோரின் பதவியும் பறிக்கப்பட்டது.

இந்தி பேசும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகியவற்றில் வளர்ந்துவரும் இளம் தலைவர்களான ஜோதிர் ஆதித்யா சிந்தியா, சச்சின் பைலட் ஆகியோர் கடந்த 4 மாதங்களில் நீக்கப்பட்டுள்ளது காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் பின்னடைவாகும்.

2013-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 23 இடங்களைப் பெற்ற ராஜஸ்தான் காங்கிரஸை தனது சுற்றுப்பயணம் மூலம் கட்சிக்குப் புத்துயிரூட்டி கடந்த தேர்தலில் 100 இடங்களை வெல்ல சச்சின் பைலட் காரணமாக இருந்தார். அவரின் உழைப்பு பெரும்பங்கு என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஆனால் அவருக்கு முதல்வர் பதவி வழங்காமல் மூத்த தலைவர் அசோக் கெலாட்டுக்கு வழங்கப்பட்டது சச்சின் பைலட்டுக்கு பெரும் அதிருப்தியாக இருந்து வந்தது. அந்தப் புகைச்சல்தான் இப்போது பெரும் பிளவுக்கு இட்டுச் சென்றுள்ளது.

அதேபோல மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஜோதிர் ஆதித்யா சிந்தியா, கமல்நாத்துக்கும் இடையிலான பிரச்சினை உச்சத்தை எட்டி ஆதித்யா சிந்தியா கட்சியிலிருந்து 20 எம்எல்ஏக்களை அழைத்துக்கொண்டு பாஜகவில் இணைந்துவிட்டார். ஆனால், அதுபோல் இணையமாட்டேன் இன்று சச்சின் பைலட் தற்போது கூறிவந்தாலும், பாஜக தனது கதவுகளை எப்போதும் திறந்தே வைத்திருப்பதாகக் கூறிவருகிறது.
காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் சிக்கல் இந்த இரு சம்பவங்கள் மூலம் மேலும் ஆழமாக்குவது மட்டுமல்லாமல், கட்டமைப்பையே வலுவிழக்கச் செய்துள்ளது.

இதுகுறித்து ஸ்வராஜ் இந்தியா அமைப்பின் தலைவரும், அரசியல் ஆலோசகருமான யோகேந்திர யாதவ் கூறுகையில், “ஜோதிர் ஆதித்யா சிந்தியா, இப்போது சச்சின் பைலட் ஆகியோர் மீது எடுக்கப்பட்ட முடிவுகள், காங்கிரஸ் கட்சிக்குள் சிக்கல் ஆழமாகச் செல்வதையே காட்டுகிறது. காங்கிரஸ் கட்சிக்குத் தெளிவான செயல்திட்டம் இல்லை, நம்பகத்தன்மையான தலைவர் இல்லை, ஒத்திசைவான திட்டம் இல்லை என்பதையே வெளிப்படுத்துகிறது. காங்கிரஸ் கட்சியிடம் தற்போது சித்தாந்தமும் இல்லை, பணியவைக்கும் அதிகாரமும் இல்லை” எனத் தெரிவித்தார்.


டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியரும் அரசியல் விமர்சகருமான சஞ்சய் கே பாண்டே கூறுகையில், “காங்கிரஸ் கட்சிக்குள் பிரச்சினைகள் ஆழமாகச் சென்றுள்ளதையே சந்தியா, பைலட் சம்பவங்கள் காட்டுகின்றன. ஒரு குடும்பத்தின் கைகளில் முழு அதிகாரத்தை அளித்துவிட்டு காங்கிரஸ் கட்சி மிகவும் வேதனைப்படுகிறது. வயதான தலைவர்கள் அமர்ந்துகொண்டு தலைமைக்கு ஆலோசனை அளிக்கும் பழமையான முறை இன்னும் தொடர்கிறது.

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி இருப்பதும், தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகியதும் தலைமைப் பதவிக்கு இருக்கும் சிக்கலைக் காட்டுகிறது. தீர்க்கமான தன்மை இல்லாமல் இருப்பது கட்சியை மிகவும் பாதிக்கிறது” எனத் தெரிவித்தார்.

ஜேஎன்யு பல்கலைக்கழைகத்தின் முன்னாள் பேராசிரியரும், அரசியல் விமர்சகருமான கமல் மித்ரா செனாய் கூறுகையில், “காங்கிரஸ் கட்சி பிரிவினையால் சிதைந்து போய் இருக்கிறது. தனித்தனியாக, குழுவாக இயங்கும்வரை எதுவும் செய்ய முடியாது. சச்சின் பைலட் தனித்துச் செயல்பட்டிருக்கக் கூடாது. தனது சொந்த அரசுக்கு எதிராகச் செயல்படாமல், தலைமையுடன் சேர்ந்து குறைகளை நேரடியாகப் பேசி இருக்கலாம்” எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் பெயர் வெளியிடவிரும்பாத நிர்வாகி ஒருவர் றுகையில், “சிந்தியா பிரச்சினை வேறு, சச்சின் பைலட் பிரச்சினை வேறு. ராஜஸ்தானில் காங்கிரஸ் வெல்வதற்காக கடுமையாக உழைத்தவர் சச்சின் பைலட். சச்சின் பைலட் வெளியேற்றம், இளம் தொண்டர்களை மனச்சோர்வடையச் செய்யும். அவரைப் பின்பற்றி பல இளைஞர்கள் கட்சிக்குள் வந்தார்கள்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x