Published : 15 Jul 2020 10:02 AM
Last Updated : 15 Jul 2020 10:02 AM
சாபஹார் ரயில் திட்டத்திலிருந்து இந்தியாவை ஈரான் நீக்கியது குறித்து அந்நாடு விளக்கமளிக்கையில், ‘இந்தியா செயல்பூர்வமாக இதில் ஈடுபடவில்லை’ என்று கூறியுள்ளது.
தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் இது தொடர்பாக வெளியான செய்தியை உறுதி செய்த ஈரான் தரப்பு இவ்வாறு விளக்கம் அளித்துள்ளது.
தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் இது தொடர்பாக வெளியான செய்தியில், “சாபஹார் துறைமுகத்திலிருந்து ஆப்கான் எல்லையினூடாக சஹேதான் வரை ரயில் பாதை அமைக்கும் ஒப்பந்தத்தை இந்தியா உடன் ஈரான் 4 ஆண்டுகளுக்கு முன்பாக மேற்கொண்டது. இந்நிலையில் திட்டத்தைத் தொடங்க இந்திய தரப்பிலிருந்து நிதி அளிப்பதில் தாமதமாகி வருவதால் தாங்களே இந்தத் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்கிறோம் என்று ஈரான் இந்தியாவை இத்திட்டத்திலிருந்து கழற்றி விட்டுள்ளது.
இந்த ரயில் பாதையின் ஒட்டுமொத்த வேலைகளும் 2022 மார்ச்சில் நிறைவேறவுள்ளது. ஈரானிய ரயில்வே இந்தியாவின் உதவியின்றியே தங்கள் நாட்டு வளர்ச்சி நிதியிலிருந்து 400 மில்லியன் டாலர்கள் நிதியை இதற்கு ஒதுக்கி வேலைகளைத் தொடங்கிவிட்டது” என்று கூறியிருந்தது.
இந்நிலையில் ஈரான் தரப்பிலிருந்து தி இந்து நாளிதழுக்கு தெரிவிக்கப்படுகையில், “சாபஹார் துறைமுகத்தில் முதலீட்டுடன் கூடுதலாக சாபஹாரிலிருந்து ஸஹேதான் மற்றும் ஸஹேதானிலிருந்து சாராக்ஸ் ஆகிய பாதைகளை கட்டுவதிலும் நிதி முதலீடு செய்வதிலும் இந்தியா கூடுதலாகப் பங்காற்ற முடியும். இந்நிலையில் இந்தியா செயல்பூர்வமாக இதில் ஈடுபடவில்லை என்பதால் ஈரானிய நிதியிலிருந்தே கட்டுமானங்களை நாங்கள் தொடங்கி விட்டோம்.
அமெரிக்கத் தடைகள்:
இந்தியாவை இந்தத் திட்டத்திலிருந்து ஈரான் நீக்கியதற்கு இந்தியத் தரப்பிலிருந்து நிதியளிப்பதில் தாமதம் ஆனதே காரணம் என்று ஈரான் தெரிவித்துள்ளது, இந்தியாவின் இந்த தாமதத்திற்கு ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளும் காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது. சாபஹார் துறைமுக ரயில் திட்டத்துக்காக இந்தியா விலக்கு பெற்றிருந்தாலும் டெல்லியில் பிப்ரவரி மாதம் நடந்த கலவரங்கள் மீது ஈரான் அயலுறவு அமைச்சர் ஜவாத் ஜரீப் கண்டனம் தெரிவித்ததையடுத்து இருதரப்பு உறவுகளில் சுணக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. மேலும் அமெரிக்கா தடை ஏற்படுத்திய காரணத்தினால் ஈரானிலிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதியையும் நிறுத்தியது.
சீனாவுடன் 25 ஆண்டுகால 400 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தை ஈரான் இறுதி செய்ததும் இந்தியாவை நீக்கியதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
ஆனால் இது குறித்து ஈரான் வட்டாரங்கள் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறும்போது, “இந்த உடன்படிக்கைகள் ஈரான் வெளிப்படையாக அறிவித்த ’லுக் ஈஸ்ட் பாலிசி’ என்பதின்பாற்பட்டது. ஆசியாவின் அனைத்து நாடுகளுடனும் ஈரான் உறவுகளை வைத்துக் கொள்ளவே விரும்புகிறது. குறிப்பாக சீனா, இந்தியா இரு நாடுகளுமே எங்கள் நண்பர்கள். இந்தியா எப்போதுமே ஈரானின் நண்பர்தான்” என்று கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT