Published : 15 Jul 2020 08:29 AM
Last Updated : 15 Jul 2020 08:29 AM
தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் தீவிரவாத தாக்குதலை அரங்கேற்றும் நோக்கில் அல் ஹிந்த் என்ற அமைப்பை நிறுவிய ஐஎஸ் தீவிரவாத இயக்க ஆதரவாளர்கள் 17 பேர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நேற்று முன்தினம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம், சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம், ஆயுத சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் பெங்களூருவில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் தமிழக - கேரள எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில் பணியில் இருந்த களியக்காவிளை சிறப்பு காவல் துணைஆய்வாளர் வில்சன் கொல்லப்பட்ட வழக்கில் கடந்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட காஜா மொய்தீன் உள்ளிட்டோர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.
ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் தமிழக தலைவராக உள்ளவர் காஜா மொய்தீன். ஐஎஸ் இயக்கத்தில் 2014 ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தமது குடும்பத்தாருடன் இணைந்த ஹாஜா பக்ருதீன் என்வரின் கூட்டாளி ஆவார் இவர். இருவருமே கடலூரைச் சேர்ந்தவர்கள்.
தீவிரவாத தாக்குதல் நடத்தும் நோக்கில் பெங்களூரைச் சேர்ந்த மெகபூப் பாஷா என்பவரும் காஜா மொய்தீனும் தீவிரவாத குழுவை நிறுவியுள்ளனர். பெங்களூரு குரப்பனபாள்யா பகுதியைச் சேர்ந்தவர் மெகபூப் பாஷா, இவரும் காஜா மொய்தீன் மற்றும் சாதிக் பாஷா ஆகியோரும் கூட்டு சேர்ந்து பெங்களூரூவில் செயல்படும் அல் ஹிந்த் அமைப்பு மூலம் இந்தியாவில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் செயல்பாடுகளையும் கொள்கைகளையும் பரப்ப தனி குழு அமைத்தனர்.
இவ்வாறு குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT