Last Updated : 15 Jul, 2020 08:12 AM

2  

Published : 15 Jul 2020 08:12 AM
Last Updated : 15 Jul 2020 08:12 AM

சச்சின் பைலட்டுக்கு ஆதரவு கருத்து? காங்கிரஸ் கட்சியிலிருந்து மூத்த தலைவர் சஞ்சய் ஜா சஸ்பெண்ட்

காங்கிரஸிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சஞ்சய் ஜா : கோப்புப்படம்

மும்பை


காங்கிரஸ் கட்சிக்கு விரோதமாகவும், ஒழுக்கக்குறைவான செயல்களில் ஈடுபட்டதற்காகவும் மூத்த தலைவர் முன்னாள் செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ஜாவை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்து மகாராஷ்டிரா காங்கிரஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதுமட்டுல்லாமல் சச்சின் பைலட்டுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்ததாலும் சஞ்சய் ஜா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு குறித்து கடுமையாக விமர்சித்து ஆங்கில நாளேடு ஒன்றில் சஞ்சய் ஜா கடந்த மாதம் கட்டுரை எழுதியிருந்தார். அதுமட்டுமல்லாமல் ஜோதிர் ஆதித்யா சிந்தியா காங்கிரஸ்கட்சியிலிருந்து விலகியபோது அதைத் தடுக்காமல் காங்கிரஸ் தலைமை செயல்பட்டது, சச்சின் பைலட் விவகாரத்தில் காங்கிரஸ் தலைமை செயல்பட்டவிதம் குறித்து கருத்து தெரிவித்த நிலையில் சஞ்சய் ஜா மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.

மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான பாலசாஹேப் தோரட் வெளியிட்ட அறிக்கையில் “ கட்சிவிரோத நடவடிக்கையிலும், ஒழுக்கக்குறைவாகவும் செயல்பட்டதால், முன்னாள் செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ஜா கட்சியிலிருந்து உடனடிாயக சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கில நாளேட்டில் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து சஞ்சய் ஜா கடந்த மாதம் கட்டுரை எழுதியது வெளியான மறுநாள் அவர் கட்சியின் செய்தித்தொடர்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சி தன்னை சஸ்பெண்ட் செய்தது குறித்து சஞ்சய் ஜா தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “ காங்கிரஸ் கட்சிக்கு எதிராக என்ன செயல்கள் செய்தேன் எனத் தெரியவில்லை. வியப்பாக இருக்கிறது. இப்போதுதான் நான் பத்திரிக்கைக் குறிப்பைப் பார்த்தேன்.

குறைந்தபட்சம் காங்கிரஸ் கட்சி என்னிடம் நேரடியாகப் பேசி நான் என்ன தவறு செய்தேன் என்பதை அதனால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதையும் தெரிவித்திருக்கலாம். கட்சியின் விதிமுறைகளை கட்சியே மீறுகிறது. சகிப்பின்மை கலாச்சாரத்தைத்தான் நாம் வெளிப்படுத்தி வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த சஞ்சய் ஜா, “ கடந்த 5 ஆண்டுகளாக சச்சின் பைலட், தனது வியர்வை, ரத்தம், கண்ணீர, உழைப்பு அனைத்தையும் ராஜஸ்தானுக்காக செலவழித்தார். 2013லிருந்து 2018ம் ஆண்டுவரை கடுமையாக உழைத்தார். 23 இடங்கள் பெற்ற காங்கிரஸை 100 இடங்களாக உயர்த்தினார் பைலட். அவருக்கு நாம் சிறந்த பரிசு கொடுத்திருக்கிறோம்.” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x