Last Updated : 15 Jul, 2020 07:44 AM

 

Published : 15 Jul 2020 07:44 AM
Last Updated : 15 Jul 2020 07:44 AM

கரோனாவில் இறப்பவர்களின் இறுதிச்சடங்கிற்கு ரூ.15 ஆயிரம் உடனடி உதவி: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு

ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி : கோப்புப்படம்

அமராவதி


ஆந்திர மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்றால் ஒருவர் உயிரிழந்தால், அவரின் இறுதிச்சடங்கிற்காக அவரின் குடும்பத்தாருக்கு உடனடியாக ரூ.15 ஆயிரம் ஆந்திர அரசின் சார்பில் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

கரோனா நோயால் இறந்தவர்களின் உடல்களை மருத்துவப் பணியாளர்கள் மோசமான முறையில் கையாள்கிறார்கள். மண் அள்ளும் எந்திரத்தின் மூலம் கொண்டு சென்றும், டிராக்டரில் கொண்டு சென்றும் புதைக்கிறார்கள் என்று தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கவலைத் தெரிவித்திருந்து, விமர்சித்திருந்தார். இதையடுத்து, இந்த அறிவிப்பை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வெளியிட்டுள்ளார்.

மாநிலத்தில் கரோானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வரும் சுகாதாரத்துறை அமைச்சருமான அலா நானி, தலைமைச் செயலாளர் நீலம் ஷானே, டிஜிபி கவுதம் சாவாங், மருத்து மற்றும் சுகாதார சிறப்புச்செயலாளர் கே.எஸ். ஜவஹர் உள்ளிட்டர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஆந்திர அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆந்திராவில் கரோனா வைரஸ் தொற்றால் ஒருவர் உயிரிழந்தால், அவரின் இறுதிச்சடங்கிற்காக குடும்பத்தாரிடம் உடனடியாக ரூ.15 ஆயிரம் அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்படும். இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு ஏதேனும் புகார்கள் வந்தால், அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல் உரிமமும் ரத்து செய்யப்படும் என முதல்வர் எச்சரித்துள்ளார்.

தனிமைப்படுத்தும் முகாம்களில் இருக்கும் அனைவருக்கும் சுகாதாரமான சூழல், தரமான உணவுகள், மருந்துகள், சிகிச்சைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக கால் சென்டர் ஒன்றை உருவாக்கி, அதில் கரோனா மையங்களில் சிகிச்சை பெறும் நோயாளிகள், தனிமைப்படுத்தும் முகாம்களில் இருப்பவர்கள் குறைகளைப் பதிவு செய்து அதில் எத்தனை நீக்கப்பட்டுள்ள என்பதையும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

மேலும், ஒவ்வொரு கரோனா மருத்துவமனை மையத்திலும் கால்சென்டர் தொலைப்பேசி எண்ணை மக்கள் அறியும் வகையில் தெரியப்படுத்த வேண்டும்.

கரோனா வைரஸுக்காக ஆந்திர அரசு எடுத்துவரும் நடவடிக்ைககள், ஒருவருக்கு கரோனா அறிகுறி இருந்தால் அவருக்கு செய்யப்படும் பரிசோதனைகள், அளிக்கும் சிகிச்சைகள், மேற்கொள்ளும் பரிசோதனைகள் ஆகியவை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு செய்ய வேண்டும்.

அனைத்து பரிசோதனைகளும் மத்திய சுகாதாரத்துறை, ஐசிஎம்ஆர் விதிமுறைப்படி செய்யப்படுகிறது என்பதை தெரிவிக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டார்.

ஆந்திராவில் கரோனா இறப்பு அதிகரிப்புக்கு முக்கியக் காரணம் கடைசி நேரத்தில் தீவிர கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருவதால் காப்பாற்ற முடியாமல் போகிறது. தனிமைப்படுத்தும் முகாம்களில் கரோனா பரிசோதனையை அதிகப்படுத்தி,பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்த வேண்டும்.

மேலும், ஆந்திராவில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தற்போது 17 ஆயிரம் மருத்துவர்கள், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் உடனடியாகத் தேவைப்படுகிறார்கள் என மருத்து குழுவினர் முதல்வரிடம் தெரிவித்தனர். உடனடியாக அதற்குரிய செயல்திட்டத்தை உருவாக்கும்படி மருத்துவத்துறை செயலாளருக்கும், சுகாதாரத்துறை அமைச்சருக்கும் முதல்வர் உத்தரவிட்டார்


இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x