Published : 14 Jul 2020 04:20 PM
Last Updated : 14 Jul 2020 04:20 PM
சாபஹார் துறைமுகத்திலிருந்து ஆப்கான் எல்லையினூடாக சஹேதான் வரை ரயில் பாதை அமைக்கும் ஒப்பந்தத்தை இந்தியா உடன் ஈரான் 4 ஆண்டுகளுக்கு முன்பாக மேற்கொண்டது. இந்நிலையில் திட்டத்தைத் தொடங்க இந்திய தரப்பிலிருந்து நிதி அளிப்பதில் தாமதமாகி வருவதால் தாங்களே இந்தத் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்கிறோம் என்று ஈரான் இந்தியாவை இத்திட்டத்திலிருந்து கழற்றி விட்டுள்ளது.
இந்த ரயில் பாதையின் ஒட்டுமொத்த வேலைகளும் 2022 மார்ச்சில் நிறைவேறவுள்ளது. ஈரானிய ரயில்வே இந்தியாவின் உதவியின்றியே தங்கள் நாட்டு வளர்ச்சி நிதியிலிருந்து 400 மில்லியன் டாலர்கள் நிதியை இதற்கு ஒதுக்கி வேலைகளைத் தொடங்கிவிட்டது.
ஈரான் நகர்ப்புற மேம்பாட்டுஅமைச்சர் மொகமட் இஸ்லாமி 628 கிமீ தொலைவுக்கான இந்த ரயில்பாதையின் பாலமிடும் பணிகளை கடந்த வாரம் தொடங்கி வைத்தார்.
இது ஏன் இப்படி இந்தியாவை கழற்றி விட நேரிட்டது என்றால் சீனா, ஈரானுடன் மிகப்பெரிய அளவில் 25 ஆண்டுகால 400 பில்லியன் டாலர் ராணுவ-பொருளாதார கூட்டுறவு மேற்கொள்வதை இறுதி செய்ததுதான் என்று கூறப்படுகிறது.
கடந்த மே, 2016-ல் பிரதமர் மோடி டெஹ்ரான் சென்ற போது சாபஹார் ரயில் திட்டத்துக்காக ஆப்கான், இந்தியா, ஈரான் முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில் சீனா, ஈரானுடன் மேற்கொள்ளவுள்ள இந்த பொருளாதார ஒப்பந்தத்தின் மூலம் பெரிய பயன்களை அடையவுள்ளது.
அதாவது ஈரானின் உள்கட்டமைப்பில் சீன முதலீடுகள், உற்பத்தி, எரிசக்தி புதுப்பித்தல், போக்குவரத்து வசதிகள் என்று சீனா பெரிய திட்டம் போட்டுள்ளது. இதன் மூலம் ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயு சப்ளைகளை சீனாவுக்கு உறுதி செய்ய திட்டம் தீட்டியுள்ளது.
சாபஹார் துறைமுகத்தையே சீனாவுக்கு குத்தகைக்கு விடுவதாகவும் செய்திகள் வெளியான நிலையில் ஈரான் அதை மறுத்துள்ளது. ஆனால் சீனா நடத்தும் பாகிஸ்தான் துறைமுகத்துடன் ஈரான் ஒரு கூட்டுறவு மேற்கொள்ள முன்மொழிந்தது.
இந்த இத்தனை சாத்தியங்களையும் புது டெல்லி கவனமாகப் பார்ப்பது நல்லது என்று ஈரானுக்கான முன்னாள் தூதர் கே.சி.சிங் தி இந்து ஆங்கிலம் நாளிதழுக்குக் கூறும்போது, “சாபஹார் துறைமுகத்தின் பயன்பாடு மற்றும் இந்தியா - ஈரான் பொருளாதார கூட்டுறவு மீது சீனா-ஈரான் ஒப்பந்தம் ஆக்ரமிப்பு செய்கிறது. இதன் மூலம் பாகிஸ்தான் - ஈரான் கடற்கரை ஊடே சீனா தன் கட்டுப்பாட்டை விரிவாக்கம் செய்யும்” என்று எச்சரிக்கிறார்.
காங்கிரஸ் விமர்சனம்:
சாபஹார் துறைமுக ரயில் திட்டத்திலிருந்து இந்தியாவை ஈரான் கழற்றிவிட்டது குறித்து காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வி தன் ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவை சாபஹார் துறைமுகத்திட்டத்திலிருந்து ஈரான் கழற்றி விட்டுள்ளது. எந்த ஒரு வேலையையும் சாதிக்கும் முன்னரே மோடிக்கு மாலைகள் விழுந்து விடுகிறது, ஆனால் மோடியின் ராஜதந்திரம் இவ்வளவுதான். ஆனால் சீனா பின்னணியில் வேலை செய்தது, ஆனால் மேலும் சிறந்த ஒப்பந்தத்தை பேரம் பேசியுள்ளது, இது இந்தியாவுக்கு பெரிய நஷ்டம்” என்று சாடியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT