Published : 14 Jul 2020 07:11 AM
Last Updated : 14 Jul 2020 07:11 AM
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 20 எம்எல்ஏ.க்கள் பங்கேற்கவில்லை.
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. முதல்வராக அசோக் கெலாட்டும் துணை முதல்வராக சச்சின் பைலட்டும் உள்ளனர். ராஜஸ்தானில் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக முதல்வர் அசோக் கெலாட் சில நாட்களுக்கு முன்பு குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் துணை முதல்வர் சச்சின் பைலட் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதனால் கோபம் அடைந்த சச்சின் பைலட், தனது ஆதரவு எம்எல்ஏ.க்களுடன் டெல்லி அருகேயுள்ள குருகிராமில் உள்ள ஓட்டலில் முகாமிட்டுள்ளார். பாஜக மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை நேற்று முன்தினம் அவர் சந்தித்துப் பேசினார். இதனால் சச்சின் பைலட் பாஜக.வில் சேருவாரா என்று பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் ஜெய்ப்பூரில் நேற்று காலை காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. ஆனால்,சச்சின் பைலட்டின் ஆதரவாளர்களான 20 எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று தெரிகிறது.
ராஜஸ்தான் காங்கிரஸ் கொறடா மகேஷ் ஜோஷி கூறும்போது, "காங்கிரஸ் ஆட்சிக்கு எவ்வித ஆபத்தும் இல்லை. எங்களிடம் பெரும்பான்மை பலம் உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் அவினாஷ் பாண்டே, சச்சின் பைலட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். பாஜக.வின் சதி முறியடிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
சச்சின் பைலட்டை சமாதானப்படுத்த ராகுல் காந்தி, பிரியங்கா காந்திஆகியோரும் காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல், ப.சிதம்பரம், வேணுகோபால் உள்ளிட்டோரும் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
101 எம்எல்ஏ.க்கள் தேவை
ராஜஸ்தான் சட்டப்பேரவையின் பலம் 200 ஆகும். இதில் பெரும்பான்மையை நிரூபிக்க 101 எம்எல்ஏ.க்களின்ஆதரவு தேவை. முதல்வர் அசோக் கெலாட் தனக்கு 109 எம்எல்ஏ.க்களின் ஆதரவு உள்ளதாக கூறி வருகிறார். சச்சின் பைலட் ஆதரவாளர்கள் கூறும்போது, அசோக் கெலாட்டிடம் 84 எம்எல்ஏ.க்கள் மட்டுமே உள்ளனர் என்று வாதிடுகின்றனர்.
ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சதீஷ் பூனியா கூறும்போது, "பாஜககூட்டணியில் தற்போது 75 எம்எல்ஏ.க்கள் உள்ளனர். இதர கட்சிகள், சுயேச்சைகள் என ஏராளமான எம்எல்ஏ.க்கள் எங்களோடு இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர்" என்றார்.
காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதால் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புநடத்த மாநில பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT