Published : 13 Jul 2020 05:10 PM
Last Updated : 13 Jul 2020 05:10 PM
மேற்கு வங்க மாநிலம், வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏ மர்மமான முறையில் வீட்டுக்கு அருகே தூக்கில் தொங்கியபடி கண்டெடுக்கப்பட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக எம்எல்ஏ கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று திரிணமூல் காங்கிரஸ் மீது பாஜக குற்றம் சாட்டுகிறது. இந்த மர்ம மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று எம்எல்ஏவின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது:
''வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் ஹேம்தாபாத் தனித்தொகுயில் கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவர் தேவேந்திரநாத் ராய் (வயது 60). பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்தார். ஆனால், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யவில்லை.
இந்நிலையில் ஹேம்தாபாத் அருகே உள்ள தனது சொந்த ஊரான பிந்தால் கிராமத்தில் நேற்று எம்எல்ஏ தேவேந்திரநாத் ராய் தங்கி இருந்தார். அப்போது நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் அவருக்குத் தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதைத் தொடர்ந்து வீட்டை விட்டு வெளியே சென்ற தேவேந்திரநாத் ராய் காலை வரை வரவில்லை.
இதையடுத்து, குடும்பத்தினர் காலையில் தேடியபோது வீட்டுக்கு அருகே இருக்கும் பூட்டப்பட்ட தேநீர்க் கடை ஒன்றின் உத்தரத்தில் தூக்கில் தொங்கியபடி தேவேந்திரநாத் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
அவரின் சட்டைப்பையில் ஒரு கடிதம் இருந்தது. அநதில் தன்னுடைய இறப்புக்குக் காரணம் என இருவரின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்''.
இவ்வாறு போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடயவியல் நிபுரணர்களும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்துள்ள எம்எல்ஏ குடும்பத்தினர், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாஜக எம்எல்ஏ தேவேந்திரநாத் ராய் மர்மமாக இறந்தது மேற்கு வங்கத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு தினாஜ்பூரில் நாளை கடையடைப்புப் போராட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. இது திரிணமூல் காங்கிரஸ் குண்டர்களின் சதிச்செயல் என்று பாஜக சார்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா ட்விட்டரில் இச்சம்பவத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், “ மேற்கு வங்கத்தில் ஹேம்தாபாத் பாஜக எம்எல்ஏ தேவேந்திரநாத் ராய் சந்தேகத்துக்கு இடமான முறையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியாக இருக்கிறது, மன்னிக்க முடியாத செயல்.
மம்தா அரசில் குண்டர்கள் ராஜ்ஜியம், சட்டம் ஒழுங்கு தோல்வி அடைந்துவிட்டது. எதிர்காலத்தில் மக்கள் இந்த மன்னிக்கமாட்டார்கள். இதை பாஜக கடுமையாகக் கண்டிக்கிறது” எனத் தெரிவித்தார்.
ஆளுநர் ஜெகதீப் தனகர் ட்விட்டரில் குறிப்பிடுகையில், “அரசியல் வன்முறை, பழிவாங்குவது மம்தா ஆட்சியில் குறைந்து வருவதைக் காட்டவில்லை. ஹேம்தாபாத் எம்எல்ஏ தேவேந்திரநாத் ராய் இறப்பு பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும். இது கொலை எனக் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த விவகாரத்தில் முழுமையான, பாரபட்சமற்ற விசாரணை தேவை. அப்பட்டமான அரசியல் வன்முறை” எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், போலீஸாரோ எம்எல்ஏ தேவேந்திரநாத் கொலை செய்யப்படவில்லை, அவர் தற்கொலை செய்துள்ளார் என்பதற்கு முகாந்திரங்கள் உள்ளன. மக்கள் அமைதி காக்க வேண்டும். மக்கள் எந்தவிதமான ஊகங்களுக்கும், முன்முடிவுகளுக்கம் வராமல் விசாரணை முடியும்வரை காத்திருக்க வேண்டும் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.
பாஜக பொதுச்செயலாளரும், மேற்கு வங்கப் பொறுப்பாளருமான விஜய் வர்க்கியா ட்விட்டரில் கூறுகையில், “தேவேந்திரநாத் மர்ம மரணம் கண்டிக்கத்தக்கது, கோழைத்தனமானது. மம்தா பானர்ஜி ஆட்சியில் நாள்தோறும் பாஜக உறுப்பினர்கள் கொல்லப்படுவது வழக்கமாகிவிட்டது. தேவேந்திரநாத் ராய் அரசியல் கொலை செய்யப்பட்டுள்ளார். பாஜகவில் சேர்ந்த குற்றத்துக்காகவா தூக்கில் தொங்கவிடப்பட்டார்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT