Last Updated : 13 Jul, 2020 12:20 PM

7  

Published : 13 Jul 2020 12:20 PM
Last Updated : 13 Jul 2020 12:20 PM

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலை நிர்வகிக்க திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு உரிமை உள்ளது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

கோப்புப்படம்

புதுடெல்லி

நாட்டிலேயே பணக்காரக் கோயிலாகக் கருதப்படும் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலை நிர்வகிக்க திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினருக்கு உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

பத்மநாப சுவாமி கோயிலை நிர்வகிக்கவும், சொத்துகளைப் பராமரிக்கவும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினருக்கு உரிமையில்லை என்று கடந்த 2011-ம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராகத் தொடரப்பட்ட மனுவில் இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயில் உலகப் புகழ்பெற்றதாகும். 18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயில் பாரம்பரியமாக திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில், மன்னர் குடும்பத்தினரின் குலதெய்வமாகக் கருதப்படுவதால் அந்தக் கோயில் நிர்வாகத்தை கடந்த 1947-ம் ஆண்டு சுதந்திரத்துக்குப் பின்பும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் வசமே இருந்தது.

இந்நிலையில் கோயில் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன, நகைகளைப் பராமரிப்பதிலும், நிதி நிர்வாகத்திலும் ஏராளமான முறைகேடுகள் நடக்கின்றன என்று கூறி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், 2011-ம் ஆண்டு, ஜனவரி 31-ம் தேதி அளித்த தீர்ப்பில், “ கோயில் நிர்வாகத்தையும், சொத்துகள் நிர்வாகத்தையும் கேரள அரசு எடுத்துக்கொள்ளலாம். கோயில் நிர்வாகத்தைக் கவனிக்க அரசு சார்பில் குழு அமைத்து நிர்வகிக்கலாம். கோயிலின் பூஜை , விழாக்கள் போன்றவை வழக்கம்போல், பாரம்பரிய முறைப்படியே நடத்த வேண்டும் அதில் மாற்றம் செய்யக்கூடாது” என உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2011-ம் ஆண்டு, மே 2-ம் தேதி கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும், கோயிலின் அனைத்துச் சொத்துகள், நகைகள், விலைமதிக்க முடியாத பொருட்கள், கோயிலில் இருக்கும் பாதாள அறைகளைத் திறந்து நகைகளை மதிப்பிட வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்தப் பணிக்கு உதவுதவற்காக வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியத்தை உச்ச நீதிமன்றம் நியமித்தது. அவரின் மேற்பார்வையில் இதுவரை 5 பாதாள அறைகள் திறந்து மதிப்பிடப்பட்டுள்ளன. அதில் பல லட்சம் கோடிக்கும் அதிகமான, விலை மதிக்கமுடியாத ஏராளமான தங்க, வைர நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. அந்த நகைகள் குறித்த மதிப்பீட்டையும் வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

இதில் கோயில் நிலவறையில் உள்ள பாதள அறையை மட்டும் திறக்க திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை. அந்த அறையில் மிகப்பெரிய சக்தி இருக்கிறது என்றும், திறந்தால் மன்னர் குடும்பத்துக்கு ஆபத்து என்றும் கூறி எதிர்ப்புத் தெரிவித்தததால், அந்த அறை திறக்கப்படவில்லை.
அந்த அறையை மறு உத்தரவு வரும்வரை திறக்கக்கூடாது என்று கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், கோயிலை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் தனது ஆய்வு குறித்து உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்து. இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா, யு.யு.லலித் ஆகியோர் இன்று தீர்ப்பளித்தனர்.

அதில், ''திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலை நிர்வகிக்கவும், சொத்துகளைப் பராமரிக்கவும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தாருக்கு உரிமை இருக்கிறது. இடைக்கால நடவடிக்கையாக கோயிலை நிர்வகிக்க திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையில் நிர்வாகக் குழு அமைக்கப்பட வேண்டும். கோயிலின் பி பாதாள அறையைத் திறந்து நகைகள், விலைமதிக்க முடியாத ஆபரணங்களை மதிப்பீடு செய்வது குறித்து நிர்வாகக் குழு முடிவு செய்யும்” எனத் தீர்ப்பளித்தனர்.

இந்தத் தீர்ப்பைக் கேட்டதும் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலின் முன் இருந்த பக்தர்கள் இனிப்புகளை வழங்கி தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். சிலர் கோயிலின் முன் விழுந்து வணங்கி, கண்ணீருடன் வழிபட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியின்போது கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தற்போது அதே கட்சியின் ஆட்சி நடைபெறும் நிலையில், அந்தத் தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு குறித்து கேரள அரசு சார்பில் எந்த விதமான கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x