Published : 13 Jul 2020 09:41 AM
Last Updated : 13 Jul 2020 09:41 AM
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மத்தியப்பிரதேசம் போல் காங்கிரஸ் ஆட்சி கவிழுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்று காலை 10.30 மணிக்கு மேல் முதல்வர் அசோக் கெலாட் இல்லத்தில் எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டி காங்கிரஸ் கட்சியின் கொறடா உத்தரவிட்டுள்ளார். இந்த கூட்டத்தில் துணை முதல்வர் சச்சின் பைலட் அவரின் ஆதரவு எம்எல்ஏக்கள் 30 பேர் பங்கேற்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும் காங்கிரஸ் கட்சிக்கு 109 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது, ஆட்சி கவிழாது, 5 ஆண்டுகள் நிலையாக ஆட்சியில் இருப்போம் என்று காங்கிரஸ் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஒருவேளை இன்றைய எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு சச்சின் பைலட், அவரின் ஆதரவு எம்எல்ஏக்கள் வராவிட்டால், அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று காங்கிரஸ் கொறடா அறிவித்துள்ளார். இதனால் பெரும் அரசியல் திருப்பம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான் சட்டப்பேரவையில் 200 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் பாஜகவுக்கு 72 எம்எல்ஏக்கள் ஆதரவும், காங்கிரஸ்கட்சிக்கு 107 எம்எல்ஏக்களும் உள்ளனர். இதில் 13 சுயேட்சை எம்எல்ஏக்களில் 10 பேர் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர், ராஷ்ட்ரிய லோக் தளம் எம்எல்ஏ, பாரதிய பழங்குடி கட்சியின் 2 எம்எல்ஏக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 2 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கூட்டணியில் உள்ளனர்.
பாஜகவுக்கு 72 எம்எல்ஏக்கள் தவிர்த்து, ராஷ்ட்ரிய லோக்தந்த்ரிக் கட்சியின் 3 எம்எல்ஏக்கள் ஆதரவும் இருக்கிறது.
இந்த சூழலில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையிலான அதிகார மோதல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இருந்து வந்தாலும், தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் பதவியை பிடிப்பதில் கெலாட்டுக்கும், பைலட்டுக்கும் இடையே தொடர்ந்து மோதல் இருந்து வந்தது. இதனால் ராகுல் காந்தி, சோனியா, பிரியங்கா தலையிட்டு பிரச்சினையை சுமூகமாக முடித்தவைத்தனர்.
இருப்பினும், துணை முதல்வராகவும், மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருக்கும் சச்சின் பைலட், ஆட்சிக்கு எதிராகவும், முதல்வர் கெட்டுக்கு எதிராகவும் அவ்வப்போது விமர்சனங்களை வைத்து வந்தார். கோட்ட நகரில் 100 பச்சிளங்குழந்தைகள் இறந்தபோது தகுந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சச்சின் பைலட் குரல் கொடுத்தார்.
இதனால் காங்கிரஸ் தலைவர் பதவியை சச்சின் பைலட்டிடம் இருந்து பறிக்க வேண்டு்ம் என அசோக் கெலாட் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வந்தனர். மாநிலங்களவைத் தேர்தலின் போது எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்க முயன்றது என்று முதல்வர் அசோக் கெலாட் குற்றம்சாட்டினார்.
இதை மறுத்த பாஜக, காங்கிரஸில் நடக்கும் உட்கட்சி பிரச்சினைக்காக எங்கள் மீது பழிபோடுகிறார் கெலாட் குற்றச்சாட்டு உண்மையில்லையென்றால் அரசியலில் இருந்து விலகுவாரா என்று பாஜக சவால் விட்டது.
இந்நிலையில் ராஜஸ்தானில் ஆட்சியைக் கவிழ்க்க சதி நடந்ததாக முதல்வர் கெலாட் குற்றச்சாட்டைத் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகக்கோரி சச்சின் பைலட்டுக்கு போலீஸார் அனுப்பிய நோட்டீஸால் அவர் அதிர்ச்சி அடைந்தார். டெல்லி சென்ற அவர் கட்சியின் தலைமையிடம் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
மேலும், கடந்த இரு நாட்களுக்கும் மேலாக சச்சின் பைலட்டை தொடர்பு கொள்ள முடியாவில்லை. இந்நிலையில் சச்சின் பைலட் அலுவலகத்திலிருந்து வாட்ஸ்அப்பில் நேற்று ஒரு செய்தி வலம் வந்தது. அதில் “ சச்சின் பைலட் வசம் 30 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஆதரவு தருவதாக உறுதியளித்துள்ளார்கள்.துணை முதல்வர் சச்சின் பைலட் நாளை நடக்கும்(இன்று) எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்கமாட்டார். அசோக் கெலாட் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது
இந்த சூழலில் ராஜஸ்தான் அரசு வலுவாக இருக்கிறது என்பதை காட்டுவதற்காக இன்று காலை 10.30 மணி்க்கு முதல்வர் அசோக் கெலாட் இல்லத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தப்படுவதாக கட்சியின் கொறடா உத்தரவிட்டுள்ளார்.
இந்த கூட்டத்தில் துணை முதல்வரும், மாநில காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட், அவரின் ஆதரவாளர்கள் பங்கேற்பார்களா என்பது தெரியவில்லை.
காங்கிரஸ் தலைவர் அவினாஷ் பாண்டே கூறுகையில், “ காங்கிரஸ் கட்சிக்கு 109 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது. அதற்கான ஆதரவுக்கடிதத்தை எம்எல்ஏக்கள் அளித்துள்ளார்கள். ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. இன்று காலை எம்எல்ஏக்கள் கூட்டத்தைக் கூட்டி கொறடா உத்தரவிட்டுள்ளார். கூட்டத்தில் பங்கேற்காத எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும். இந்த பிரச்சினை அனைத்துக்கும் பின்புலத்தில் பாஜக இருக்கிறது” எனத் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT