Published : 12 Jul 2020 04:03 PM
Last Updated : 12 Jul 2020 04:03 PM

ராஜஸ்தான் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி; சச்சின் பைலட்டுக்கு தீவரவாத தடுப்பு போலீஸ் நோட்டீஸ்: முதல்வர் கெலோட் மறுப்பு

ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கு விளக்கம் கோரி மாநில தீவிரவாத தடுப்பு போலீஸ் நோட்டீஸ் அனுப்பியதாக வெளியான தகவலை முதல்வர் கெலோட் மறுத்துள்ளார்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்வராக அசோக் கெலாட் இருந்து வருகிறார்.
அங்கு துணை முதல்வராக உள்ள சச்சின் பைலட்டுக்கும், முதல்வர் கெலோட்டுக்கும் இடையே அதிகார மோதல் நீடித்து வருகிறது.

அசோக் கெலோட்டின் நடவடிக்கையால் சச்சின் பைலட் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில் பாஜகவினர் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.

ராஜஸ்தானிலும் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயல்வதாகக் குற்றம்சாட்டி முதல்வர் அசோக்கெலாட் 90-க்கும் மேற்ட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்களை தனியார் தங்கும்விடுதிக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தார்.

எனினும் மாநிலங்களவைத் தேர்தல் பிரச்சினை இன்றி நடந்து முடிந்தது. இந்தநிலையில் ராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜக மீண்டும் முயலுவதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். இந்நிலையில் துணை முதல்வர் சச்சின் பைலட் தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ளதாக அதிகாரபூர்வ மற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவருக்கு 19 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகவும் தெரிகிறது. இந்தநிலையில் அசோக் கெலோட்டின் குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. பாஜக ஆட்சியை கவிழ்க்கும் செயலில் ஈடுபடவில்லை எனவும், காங்கிரஸில் உட்கட்சி மோதல் நடைபெறுவதாகவும் ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் பூனியா விளக்கம் அளித்துள்ளார்.

இந்தநிலையில் சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் டெல்லி அருகே குருகிராமில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் சிலருக்கு சொல்லாமல் மாநிலத்தை விட்டு வெளியேறியது குறித்து ராஜஸ்தான் மாநில போலீஸின் தீவிரவாத தடுப்பு பிரிவு சிறப்பு படை நோட்டீஸ் வழங்கியுள்ளதாக தகவல் வெளியானது. சச்சின் பைலட்டை அவமானப்படுத்தும் நோக்கத்தில் இதுபோன்ற செயல்களில் முதல்வர் கெலோட் ஈடுபடுவதாக பைலட் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதனை கெலேட் மறுத்துள்ளார். இதுபோன்று போலீஸ் தரப்பில் நோட்டீஸ் எதுவும் அனுப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x