Published : 12 Jul 2020 12:46 PM
Last Updated : 12 Jul 2020 12:46 PM
கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பெங்களூரு நகர்ப்புறம், புறநகர் ஆகியவற்றில் வரும் 14-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை முழு ஊரடங்கு கொண்டுவரப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
லாக்டவுன் காலத்தில் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து திங்கள்கிழமை (நாளை) விரிவாக வெளியிடப்படும் என்றும் கர்நாடக அரசு நேற்று இரவு அறிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸால் இதுவரை 36 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அங்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 67 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் மருத்துவர்கள் ஆலோசனையின்படி பெங்களூரு நகர்ப்புறம் மற்றும் புறநகரில் வரும் 14-ம் தேதி முதல் 22-ம் தேதிவரை முழுமையான ஊரடங்கு பிறப்பிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக முதல்வர் பிஎஸ்.எடியூரப்பா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
''கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவ வல்லுநர்கள் அறிவுரைப்படி பெங்களூரு நகர்ப்புறம், பெங்களூரு ஊரகப்பகுதியில் வரும் 14-ம் தேதி இரவு 8மணி முதல் 22-ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது.
இந்தக் காலகட்டத்தில் மருத்துவமனைகள், பலசரக்குக் கடைகள், பால், காய்கறிகள், மருந்துக் கடைகள், அத்தியாவசியப் பொருட்கள் விற்பனைக்குத் தடையிருக்காது. திட்டமிட்டபடி மருத்துவக் கல்லூரி தேர்வுகள் நடைபெறும்.
லாக்டவுன் காலகட்டத்தில் மக்கள் அரசுடன் கைகோத்துச் செயல்பட்டு, வீட்டுக்குள் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்கச் சென்றால், சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும். லாக்டவுன் விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
கரோனா காலத்தில் முன்களத்தில் பணியாற்றும் ஆஷா பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள், மருத்துவர்கள், அதிகாரிகள், காவலர்கள், ஊடகத்தினர் ஆகியோரின் பணி பாராட்டுக்குரியது. விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் திங்கள்கிழமை வெளியிடப்படும்''.
இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT