Published : 12 Jul 2020 09:08 AM
Last Updated : 12 Jul 2020 09:08 AM
தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்வதற்காக, எந்தவிதமான பாதுகாப்பும் இன்றி தலையும், காலும் வெளியே தெரியுமாறு ஆட்டோவில் ஏற்றிச் சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
நிஜாமாபாத் அரசு மருத்துவமனையில் 50 வயது மதிக்கத்தக நபர் கரோனாவில் உயிரிழந்தவுடன் ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவிக்காமல், உறவினர் ஒருவர் ஆட்டோவில் உடலை எடுத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து நிஜாமாபாத் அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் நாகேஸ்வர ராவிடம் தொலைபேசி வாயிலாக நிருபர் கேட்டபோது அவர் கூறியதாவது:
“கடந்த மாதம் 27-ம் தேதி 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் கரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கெனவே நீண்டகால நோய்களான ரத்தக்கொதிப்பு, நீரிழிவு இருந்ததால், அதற்கும் சிகிச்சை எடுத்துவந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.
உயிரிழந்த அந்த 50 வயது மதிக்கத்தக்க நபர், அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் உறவினராவார். உயிரிழந்த தன்னுடைய உறவினர் உடலை தன்னிடம் ஒப்படைத்துவிடுங்கள், தான் கொண்டு சென்று அடக்கம் செய்வதாக மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர் எங்களிடம் கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் அவரிடம் உயிரிழந்தவரின் உடல் ஒப்படைக்கப்பட்டது.
அந்த ஊழியரோ ஆம்புலன்ஸுக்காகக் காத்திருந்தால் காலதாமதமாகும் என்பதால், ஆட்டோவில் கொண்டு செல்வதாகக் கூறி உடற்கூறு ஆய்வகத்தில் பணியாற்றும் ஒருவரின் உதவியுடன் உடலை எடுத்துச் சென்றார்” எனத் தெரிவித்தார்.
கரோனா தொற்றில் ஒருவர் உயிரிழந்தால், அவரை எவ்வாறு பாதுகாப்புடன் அடக்கம் செய்ய வேண்டும், அடக்கம் செய்யும் சுகாதாரப் பணியாளர்கள் எத்தகைய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து மாநில அரசுகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் வழங்கியுள்ளது. ஆனால், அனைத்தையும் கண்டுகொள்ளாமல் ஆட்டோவில் உடல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
கரோனாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மிகுந்த கண்ணியத்துடன், மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தியும் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT