Published : 12 Jul 2020 08:40 AM
Last Updated : 12 Jul 2020 08:40 AM
மும்பையில் மிகப்பெரிய குடிசைவாழ் பகுதியான தாராவியில் கரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு, மீண்டுவருவதற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டுத் தெரிவித்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அப்பகுதி மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
உலகிலேயே மிகப்பெரிய குடிசைவாழ் பகுதியாக இருப்பது மும்பை தாராவி பகுதியாகும். இங்கு ஏறக்குறைய 6.50 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். தாராவி பகுதிக்குள் கரோனா தொற்று பரவினால் கட்டுப்படுத்துவது கடினம் என்று அதிகாரிகள் அஞ்சினர்.
ஆனால், தாராவி பகுதியிலும் கரோனா தொற்று ஏற்பட்டது. மிகவும் குறுகலான தெருக்கள், அடிப்படை வசதிகள் அற்ற வீடுகள், நெருக்கமான இடத்தில் மக்கள் வசிப்பது போன்றவை கரோனா தொற்றை மேலும் அதிகமாக்கும் என்று அஞ்சப்பட்டது. அதற்கேற்ப நாளுக்கு நாள் கரோனா வைரஸ் தொற்று அதிகமாகி 2,359 பேர் அதிகபட்சமாகப் பாதிக்கப்பட்டனர்
தொடக்கத்தில் கரோனா எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலம் 18 நாட்கள் என இருந்தது. ஆனால், மக்களின் கட்டுக்கோப்பு, அதிகாரிகளின் நடவடிக்கையால் இரட்டிப்பாகும் காலம் மே மாதம் 43 நாட்கள், அதன்பின் ஜூன் மாதத்தில் 108 நாட்கள், ஜூலையில் 430 நாட்கள் என்று வந்து கரோனா வளைகோட்டைச் சாய்த்துள்ளனர். தற்போது 2,359 கரோனா நோயாளிகளில் 1,952 பேர் குணமடைந்த நிலையில் 166 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனா வைரஸை சிறப்பாகக் கட்டுப்படுத்தியதற்காக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானன் தாராவிக்குப் பாராட்டுத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தாராவி மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “உலக சுகாதார அமைப்பு நமது நாட்டின் தாராவி பகுதி கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தியது குறித்து பாராட்டுத் தெரிவித்துள்ளது. தாராவியில் நிகழ்த்தப்பட்ட இந்தச் சாதனைக்கு அனைத்து அதிகாரிகளும் உரித்தானவர்கள். குறிப்பாக தாராவி குடிசைவாழ் மக்களுக்கு எனது வாழ்த்துகள், பெரிய கைதட்டல்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT