Published : 12 Jul 2020 06:46 AM
Last Updated : 12 Jul 2020 06:46 AM

கேரள அரசியலில் புயலை கிளப்பும் தங்கக் கடத்தல் ஊழல்

புதுடெல்லி

ரூ.13 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பிடிபட்டுள்ளது கேரள அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்துக்கு சரக்குவிமானத்தில் வந்த பொருட்களை, கடந்த 5-ம் தேதி சுங்கத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது, ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) தூதரகத்தின் பெயரில் பார்சல் ஒன்று வந்திருந்தது. சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் அதை பிரித்துப் பார்த்த போது அதில்ரூ.13 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கக் கட்டிகள் இருந்தன.

தூதரக பொருட்களுக்கு பரிசோதனையில் இருந்து விலக்கு இருப்பதால், இந்த நூதன வழியை கடத்தல்காரர்கள் பயன்படுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில்தூதரக முன்னாள் ஊழியர் சரித் குமார் கைது செய்யப்பட்டார். இந்த கடத்தலின் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் என்ற பெண் தற்போது தலைமறைவாகி உள்ளார்.

ஸ்வப்னா சுரேஷ், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தவர். இதையடுத்து அவரை பணியிலிருந்து கேரள அரசு உடனடியாக நீக்கியது. இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாகக் கூறப்
பட்டதையடுத்து முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளரும், ஐ.டி. துறை செயலாளருமான சிவசங்கர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால், தங்கம் கடத்தல் விவகாரம் மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.

இதுகுறித்து சுங்கத் துறை ஆணையர் சுமித் குமார் கூறும்போது, ‘‘சுங்கத் துறை சட்டம், தூதரக அதிகாரிகள் தொடர்பு சட்டத்தின்படி தூதரக அலுவலக பணிக்காக வரும் பொருட்கள், பார்சல்கள், தூதரக அதிகாரிகளின் தனிப்பட்ட பார்சல்
களை பிரிக்கக் கூடாது என விதிகள் உள்ளன. இந்த பார்சலில் சந்தேகம் இருந்ததால் அதிகாரியின் அனுமதியைப் பெற்றுப் பிரித்துள்ளனர்” என்றார்.

கேரளாவில் கடத்தல் மூலம் பிடிபட்ட வழக்கு தொடர்பான விவரங்கள்:

சட்டத்தின் கீழ் பிடிபட்டவை

சுங்கத் துறை ஆணையரகம் (தடுப்பு) சார்பில் 2019-20-ம் நிதியாண்டில் மொத்தம் 540.37 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது. 2018-19-ல் 251 கிலோகடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்டது. கேரளாவில் கடந்த ஆண்டில் கடத்தல் தங்கம் தொடர்பாக 802 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

விமான நிலையங்களில்..

கோழிக்கோடு விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகளால் 2019-20-ல் மட்டும் 232 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது. கொச்சி விமான நிலையத்தில் 200 கிலோ தங்கமும், கண்ணூர் விமான நிலையத்தில் 4.1 கிலோ தங்கமும், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 200 கிலோவுக்கும் அதிகமாக தங்கமும் பிடிபட்டது.

கடத்தல்காரர்கள்

இந்தியாவில் தங்கம் வாங்கும் போது 12.5 சதவீத இறக்குமதி வரி, 3 சதவீத ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். இதனால் இந்தியாவில் தங்கம் கடத்தல் அதிகளவில் நடைபெறுகிறது. கடத்தல் தங்கத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்காக கடத்தல்காரர்கள், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை குறி வைக்கின்றனர். சுற்றுலா விசா மூலம் வெளிநாடு சென்று வேலை தேடிவிட்டு திரும்புவோர், வெளிநாட்டுக்குப் பயணம் சென்று இந்தியா திரும்புவோரையும் இந்தக் கடத்தலில் அவர்கள் ஈடுபடுத்துகின்றனர். இதற்கு பிரதிபலனாக அவர்களுக்கு ரூ.20 ஆயிரம், இலவச விமான டிக்கெட்களை வழங்குகின்றனர்.

ஒருவேளை சுங்கத் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளால் தங்கம் பிடிபடும்போது, கைது செய்யப்படும் நபரோடு வழக்கு முடிந்து விடுகிறது.

கடத்தலில் ஈடுபடும் நபரை, சம்பந்தப்பட்ட நாட்டு ஏஜென்ட் தேர்வு செய்கிறார். தங்கம் இந்த நாட்டுக்கு வந்ததும் மற்றொரு ஏஜென்ட் அதைவிமான நிலையத்தில் இருந்துபெற்று மற்றொரு இடத்துக்கு மாற்றுவார். விமான நிலையங்களில் தங்கம் எடுத்துவருவோர் பிடிபட்டாலும், மூலகாரணமாக இருக்கும் நபர் மட்டும் பிடிபடவே மாட்டார். இந்த கடத்தல்தொழில், சில சுங்கத்துறை அதிகாரிகள்
மட்டத்திலும் ஊடுருவி உள்ளது. அதேபோல் தங்கக் கடத்தலில் தங்க நகைக் கடைக்காரர்கள் சிக்குவது அரிதாக இருக்கிறது.

அதிகாரிகள் உடந்தை

சில இடங்களில் சுங்கத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள், விமானநிலைய பணியாளர்களை பயன்படுத்தி அவர்களுக்கு லஞ்சம் கொடுத்து தங்கத்தை கடத்திச் செல்கின்றனர்.

தூதரகம் மூலம்...

தற்போது புதிய முறையாக தூதரகங்கள், தூதரக ஊழியர்கள், தூதரக உடமைகள் மூலம் தங்கம் கடத்தும் நூதன முறையை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தூதரக பார்சல்களை உயர் அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் பிரிக்கக் கூடாது என்பது விதி. ஒருவேளை அந்த பார்சல் சந்தேகத்துக்கு உரியதாக உள்ளது என சுங்கத்துறை அதிகாரிகள் நினைத்தால், தூதரக ஊழியரின் அனுமதி பெற்றுஅவர் முன்னிலையில் பிரிக்கலாம்.

எதிர்க்கட்சிகள்

தங்கம் கடத்தல் விவகாரத்தில் முதல்வர் அலுவலகத்தின் பெயரும் அடிபடுவதால், கடத்தலில் முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி உள்ளன. இதுதொடர்
பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

ஸ்வப்னா சுரேஷ்

கடத்தலில் சிக்கியுள்ள ஸ்வப்னா சுரேஷ், கேரளாவை பூர்வீகமாக கொண்டு ஐக்கிய அரபு எமிரேட்டில் பிறந்து வளர்ந்தவர். தனது படிப்பை முடித்து விட்டு அபுதாபி விமான நிலையத்தில் பயணியர் சேவைப் பிரிவில் பணியாற்றினார். கடந்த 2013-ம் ஆண்டு கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று கேரளாவுக்குத் திரும்பி விட்டார். பின்னர் திருவனந்தபுரத்தில் உள்ள ஏர் இந்தியா விமான
நிறுவன அலுவலகத்தில் பணியாற்றினார். அப்போது சக ஊழியர் மீது பொய் புகார் கொடுத்து போலீஸில் மாட்டிக்கொண்டார். இதையடுத்து அவரை போலீஸார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

பின்னர் ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்தில் நிர்வாக செயலாளராக பணியாற்றினார். அங்கும் சர்ச்சையில் சிக்கியதால் தூதரகப் பணியில் இருந்தும் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து கேரள தகவல் தொழில்நுட்பப் பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் பணிக்குச் சேர்ந்தார்.

ஆனாலும் தான் பணியாற்றிய தூதரக அலுவலக அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார். இந்த சூழலில்தான் போலி ஆவணங்கள் தயாரித்து தூதரகத்தின் சிறப்பு அந்தஸ்தை தவறாகப் பயன்படுத்தி தங்கக் கடத்தலை அரங்கேற்றியுள்ளார் ஸ்வப்னா.

கேரள அரசு தயார்

இந்த வழக்கு தொடர்பாக எந்த விசாரணைக்கும் தயார் என கேரள அரசு தெரிவித்துள்ளது. மேலும் அலுவலகத்தில் நடந்த ஊழலுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று முதல்வர் பினராயி விஜயன் திட்டவட்ட மாக மறுத்து வருகிறார். எது எப்படி இருந்தாலும், தீவிர விசாரணை நடத்தப்பட்டால் கேரள அரசில் பெரும்புள்ளிகள் சிக்குவார்கள் என்று உயர்மட்ட அதிகாரிகள் கூறுகின்றனர்.சுங்கத் துறை சட்டம், தூதரக அதிகாரிகள் தொடர்பு சட்டத்தின்படி தூதரக அலுவலக பணிக்காக வரும்
பொருட்கள், பார்சல்கள், தூதரக அதிகாரிகளின் தனிப்பட்ட பார்சல்களை பிரிக்கக் கூடாது என விதிகள் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x