Published : 11 Jul 2020 10:07 PM
Last Updated : 11 Jul 2020 10:07 PM
இன்று கேரளாவில் 488 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கேரளாவில் 'சூப்பர் ஸ்பிரெட்' என்ற நிலை உள்ளது. சமூகப் பரவல்தான் இதன் அடுத்தகட்டம் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
''கேரளாவில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 400-ஐத் தாண்டி வருகிறது. இன்று கேரளாவில் 488 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 143 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இன்று 2 பேர் கரோனா பாதித்து மரணமடைந்துள்ளனர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 66 வயதான சைபுதீன் என்பவரும், எர்ணாகுளத்தைச் சேர்ந்த 79 வயதான பாலகிருஷ்ணன் என்பவரும் மரணமடைந்துள்ளனர்.
இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 167 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 76 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் ஆவர். கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் 234 பேருக்கு நோய் பரவியுள்ளது. இன்று ஆலப்புழா, கோட்டயம் மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 3 சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும், ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள இந்தோ- திபெத் படையைச் சேர்ந்த 2 பேருக்கும், திருச்சூர் மற்றும் பாலக்காடு மாவட்டத்திலுள்ள எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 2 பேருக்கும், கண்ணூர் மாவட்டத்தில் உள்ள 4 ராணுவ வீரர்களுக்கும் நோய் பரவியுள்ளது. இன்று ஆலப்புழா மாவட்டத்தில் மிக அதிகமாக 87 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 69 பேருக்கும், பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 54 பேருக்கும், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 51 பேருக்கும், பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 48 பேருக்கும், எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த 47 பேருக்கும், திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 29 பேருக்கும், கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த 19 பேருக்கும், கொல்லம் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 18 பேருக்கும், கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த 17 பேருக்கும், கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த 15 பேருக்கும், வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேருக்கும், இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேருக்கும் இன்று நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று நோய் குணமடைந்தவர்களில் 43 பேர் பத்தனம்திட்டா மாவட்டத்தையும், 26 பேர் கொல்லம் மாவட்டத்தையும், 17 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், 15 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், 11 பேர் ஆலப்புழா மாவட்டத்தையும், 7 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், தலா 6 பேர் திருவனந்தபுரம் மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களையும், தலா 4 பேர் இடுக்கி மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களையும், 3 பேர் எர்ணாகுளம் மாவட்டத்தையும், ஒருவர் கண்ணூர் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். இதையடுத்து இதுவரை 3,965 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 3,442 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 12,104 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 3,34,849 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 6,449 பரிசோதனை முடிவுகள் இன்னும் வர உள்ளன. மேலும் சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 73,768 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 66,636 பேருக்கு நோய் இல்லை எனத் தெரியவந்துள்ளது. கேரளாவில் தற்போது நோய்த் தீவிரம் உள்ள பகுதிகளில் பட்டியலில் 16 பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து தற்போது கேரளாவில் 195 நோய்த் தீவிரம் உள்ள பகுதிகள் உள்ளன. கேரளாவில் பல்வேறு பகுதிகளில் 1,82,050 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 3,694 பேர் மருத்துவமனையில் உள்ளனர். இன்று கரோனா அறிகுறிகளுடன் 570 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இன்றைய கணக்கை வைத்துப் பார்க்கும்போது நோயின் தீவிரம் மாநிலம் முழுவதும் பரவும் அறிகுறிகள் காணப்படுகின்றன. திருவனந்தபுரம் மாவட்டத்தில் இன்று நோய் பாதிக்கப்பட்ட 69 பேரில் 46 பேருக்கு கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவியுள்ளது. இதில் 11 பேருக்கு எப்படி நோய் பரவியது எனக் கண்டுபிடிக்க முடியவில்லை. திருவனந்தபுரம் மாவட்டத்தில், நோய் அதிக பாதிப்பு ஏற்பட்ட பூந்துறை பகுதியில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 கிலோ அரிசி வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது
இன்று ஆலப்புழா மாவட்டத்தில்தான் மிக அதிகமாக 87 பேருக்கு நோய் பரவியுள்ளது. இதில் 51 பேருக்குக் கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவியுள்ளது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் 25 பேருக்கும், மலப்புரம் மாவட்டத்தில் 27 பேருக்கும், எர்ணாகுளம் மாவட்டத்தில் 30 பேருக்கும், காசர்கோடு மாவட்டத்தில் 7 பேருக்கும், கொல்லம் மாவட்டத்தில் 7 பேருக்கும், கோழிக்கோடு மாவட்டத்தில் 8 பேருக்கும், கோட்டயம் மாவட்டத்தில் 4 பேருக்கும் கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவியுள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் 5 பேருக்கு நோய் எப்படிப் பரவியது என இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதேபோல காசர்கோடு மாவட்டத்தில் 2 பேருக்கு நோய் எங்கிருந்து பரவியது எனக் கண்டுபிடிக்க முடியவில்லை. கேரளாவில் நோயின் தீவிரம் அதிகரித்து வருவதால் 'பிரேக் தி செயின்' முறையை அனைவரும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். இதன்படி பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, அடிக்கடி கைகளைக் கழுவுவது, முகக் கவசம் அணிவது ஆகிய நடைமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். நோய் பாதித்தவர்களில் பெரும்பான்மையோருக்கு நோய் அறிகுறிகள் காணப்படவில்லை. தற்போது நோய்ப் பரவலில் கேரளா மிக மோசமான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
சமூகப் பரவல் ஆபத்து மிக அருகில்தான் உள்ளது. தற்போது கேரளாவில் 'சூப்பர் ஸ்பிரெட்' என்ற நிலை உள்ளது. சமூகப் பரவல்தான் இதன் அடுத்த கட்டம் ஆகும். எனவே அனைவரும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். திருவனந்தபுரத்தில் நோய்ப் பரவல் அதிகம் இல்லாத இடங்களில் மும்மடங்கு ஊரடங்கு சட்டத்தில் நிபந்தனைகள் தளர்த்தப்படும். மலப்புரம் மாவட்டம் பொன்னானியில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்''.
இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT