Published : 11 Jul 2020 05:24 PM
Last Updated : 11 Jul 2020 05:24 PM
கர்நாடக முதல்வர் அலுவலக ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முதல்வர் எடியூரப்பா தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் பலியானோரின் எண்ணிக்கை 550 ஆக அதிகரித்துள்ளது.
பெங்களூருவில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் முன்னாள் முதல்வர் சித்தராமையா மைசூருவுக்கு இடம்பெயர்ந்துள்ளார்.
இதனிடையே முதல்வர் எடியூரப்பாவின் அரசு இல்லமான கிருஷ்ணாவில் பணியாற்றிய அலுவலக உதவியாளர், சமையலர், ஓட்டுநர் ஆகியோருக்கும், காவலர் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே போல தலைமை செயலகத்திலும் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் அறை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதுகுறித்து எடியூரப்பா விடுத்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கிருஷ்ணா இல்ல ஊழியர்களுக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. எனவே என்னை நானே டாலர்ஸ் காலனியில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அடுத்த சில தினங்களுக்கு வீட்டில் இருந்தவாறு பணியாற்றுவேன். முக்கியமான விஷயங்களை தொலைபேசி, ஆன்லைன் மூலம் அதிகாரிகளிடம் கேட்டறிந்து, உரிய உத்தரவுகளை பிறப்பிப்பேன்.
பெங்களூருவில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவது குறித்து பொறுப்பு அமைச்சர்கள், பெங்களூருவைச் சேர்ந்த எம்பிக்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள், 196 வார்டு உறுப்பினர்கள் ஆகியோரிடம் இணையதளம் வாயிலாக ஆலோசனை நடத்தியுள்ளேன். அதே போல கர்நாடகா முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன்.
பொதுமக்களும், கட்சியினரும் அஞ்சும் வகையில் எதுவும் இல்லை. கரோனாவை உரிய முறையில் எதிர்கொண்டு, வென்று வருவதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. அனைவரும் முகக்கவசம் அணிதல், உரிய சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், கிருமி நாசினி பயன்படுத்துதல், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருத்தல் ஆகியவை கரோனா வைரஸை விட அவசியம் பின்பற்ற வேண்டியவை ஆகும்.
இவ்வாறு அதில் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT