Published : 11 Jul 2020 02:27 PM
Last Updated : 11 Jul 2020 02:27 PM
ராஜஸ்தானின் காங்கிரஸ் தலைமை ஆட்சியைக் கவிழ்க்க எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.15 கோடி வரை அளிக்க முயற்சி செய்கிறது பாரதிய ஜனதா கட்சி என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றம்சாட்டியுள்ளார்.
“ராஜஸ்தான் அரசு கரோனா வைரஸுக்கு எதிராகப் போராடி வரும் நிலையில் பாஜக தொடர்ந்து எங்களுக்குத் தொல்லை கொடுத்து வருகிறது. பாஜக எல்லை மீறி வருகிறது என்பதை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தி வருகிறோம்.
எங்கள் ஆட்சியைக் கவிழ்க்க பெரிய அளவில் சதித் திட்டம் தீட்டி வருகிறது. கர்நாடகா, மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைக் கவிழ்த்து பாஜக ஆட்சியை நிறுவினர்.
கட்சி மாற, ஆட்சியைக் கவிழ்க்க எம்.எல்.ஏ.க்களுக்கு பெரிய அளவு பணம் போவதாக பேச்சு எழுகிறது. சில எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.15 கோடி வரை அளிக்க முன்வருவதாகத் தெரிகிறது. வேறு சிலருக்கு வேறு சில சாதகங்கள் உறுதியளிக்கப்படுகிறது என்று கேள்விப்படுகிறோம். இது மிகவும் சீரான முறையில் நடைபெற்று வருகிறது.
2014-ல் பாஜக வெற்றியை அடுத்தே அந்தக் கட்சியின் உண்மையான முகம் தெரியவருகிறது. முன்னால் அரசல் புரசலாகச் செய்ததை இப்போது வெளிப்படையாகவே செய்து வருகின்றனர்.
குஜராத்தில் 7 எம்.எல்.ஏ.க்களை வாங்கி கடந்த மாத ராஜ்யசபா தேர்தலில் வெற்றிபெற்றனர். ராஜஸ்தானிலும் அதையே செய்யப் பார்த்தனர், ஆனால் நாங்கள் அவர்களைத் தடுத்திருக்கிறோம். நீண்ட காலத்துக்கு நினைவில் இருக்குமாறு பாடம் கற்பித்துள்ளோம்.”
மக்கள் பாஜகவை பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். வரும் தேர்தல்களில் பாஜகவின் இந்த திமிர் பிடித்த போக்கு உடைக்கப்படும். இந்திய மக்கள் பாஜகவுக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள்” என்றார் அசோக் கேலாட்.
200 இடங்களுக்கான ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் 107 இடங்களை காங்கிரஸ் பெற்றுள்ளது. 12 சுயேச்சை உறுப்பினர்கள் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது. இதோடு ராஷ்ட்ரிய லோக் தள், சிபிஎம், பாரதிய ட்ரைபல் கட்சி ஆகியவற்றின் 5 உறுப்பினர்களும் காங்கிரஸுக்கு ஆதரவு அளிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT